
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் அக்டோபர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இத்தொடரில் பங்கேற்கும் அணி தற்சமயம் பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தவகையில் இத்தொடரில் நேற்று நடைபெற்ற 6ஆவது பயிற்சி ஆட்டத்தில் இலங்கை மற்றும் ஸ்காட்லாந்து மகளிர் அனிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணிக்கு அந்த முடிவு சரியானதாக அமையவில்லை. ஏனெனில் ஸ்காட்லாந்து அணி வீராங்கனைகளால் இலங்கை அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுத்து விளையாட முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். குறிப்பாக அந்த அணியில் அதிகபட்சமாக சாரா பிரைஸ் 26 ரன்களையும், ரேச்சர் 10 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர்.
இதனால் ஸ்காட்லாந்து மகளிர் அணி 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 58 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இலங்கை அணி தரப்பில் பிரபோதனி, சச்சினி நிசன்சலா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை மகளிர் அணியிலும் விஷ்மி குணரத்னே, கேப்டன் சமாரி அத்தபத்து, ஹர்ஷிதா சமரவிக்ரமா, ஹாசினி பெரேரா, கவிஷா தில்ஹாரி உள்ளிட்டோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தாலும், 15.3 ஓவர்களில் இலக்கை அணி இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றது.