
டி20 உலக கோப்பைக்கு முன்பாக ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஆஸ்திரேலியாவில் நடந்துவருகிறது. டி20 உலக கோப்பைக்கு இந்த தொடர் அந்த 2 அணிகளுக்கும் மிகச்சிறந்த முன் தயாரிப்பாக இருக்கும். பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி, அதே உற்சாகத்துடனும் உத்வேகத்துடனும் ஆஸ்திரேலியாவிற்கு வந்துள்ளது இங்கிலாந்து அணி.
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான முதல் டி20 போட்டி இன்று பெர்த்தில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஜோஸ் பட்லர் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகிய இருவரும் இணைந்து அதிரடியாக அடித்து விளையாடி வேகமாக ஸ்கோர் செய்தனர். பட்லர் - அலெக்ஸ் ஹேல்ஸ் இருவருமே அரைசதம் அடித்து, அபாரமான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர்.