
கிரிக்கெட்டை அடுத்த பரிணாமத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தரப்பில் தி ஹண்ட்ரட் என்றழைக்கப்படும் ஒரு இன்னிங்ஸிற்கு 100 பந்துகள் மட்டுமே வீசப்படும் கிரிக்கெட் தொடரை நடத்தி வருகிறது. அந்தவகையில் நடப்பாண்டிற்கான தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்தபடி இத்தொடரில் மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணிக்காக இங்கிலாந்து வீர்ர் ஜோஸ் பட்லர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.
மேற்கொண்டு நடப்பு சீசனுக்கான தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடருக்கு ஜோஸ் பட்லர் தயாராகி வந்த நிலையில், பயிற்சியின் போது காயமடைந்தார். அதன்பின் அவருக்கு மேற்கொள்ளபட்ட மருத்துவ பரிசோதனையின் முடிவில், அவரது காயம் தீவிரமடைந்துள்ளது தெரியவந்துள்ளது. இதனையடுத்து நடப்பு சீசனுக்கான தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரில் இருந்து விலகுவதாக ஜோஸ் பட்லர் இன்று அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “என்னுடைய காயம் காரணமாக நடப்பு சீசன் தி ஹெண்ட்ரட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க முடியவில்லை. நடப்பு சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணி, இனி வரும் போட்டிகளிலும் வெற்றிபெற என்னுடைய வாழ்த்துகள். கூடிய விரைவில் 100% உடற்தகுதியை எட்டுவதற்காக கடினமாக உழைத்து வருகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.