பேட்டர்களை திக்குமுக்காட வைத்த ஜடேஜா; வைரல் காணொளி!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா விக்கெட்டுகளை வீழ்த்தி காணொளி வைரலாகி வருகிறது.

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 37ஆவது லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடியது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 326 ரன்கள் விளாசியது. அதிகபட்சமாக விராட் கோலி 101 ரன்களையும், ஸ்ரேயாஸ் ஐயர் 77 ரன்களையும் விளாசினர். முதல் 10 ஓவர்களில் 91 ரன்களை இந்திய அணி குவித்திருந்த நிலையில், ஆடுகளம் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமாக மாறியது. இதனால் இந்திய அணி நிதானமாக விளையாடி சிறந்த இலக்கை நிர்ணயித்தது.
அதன்பின் தென் ஆப்பிரிக்கா அணி தரப்பில் பவுமா - டி காக் கூட்டணி களமிறங்கியது. இதில் சிராஜ் வீசிய 2வது ஓவரிலேயே டி காக் 5 ரன்களில் போல்டாகி ஆட்டமிழந்தார். பின் கேப்டன் பவுமா - வான் டர் டஸன் கூட்டணி இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் 8 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 21 ரன்கள் சேர்த்திருந்தது. இதன்பின் ஆடுகளம் சுழலுக்கு சாதகமாக இருப்பதால், ரோஹித் சர்மா உடனடியாக பந்தை ஜடேஜா கைகளில் கொடுத்தார்.
அதேபோல் ஸ்லிப் திசையில் ஃபீல்டரை நிறுத்தி அட்டாக் செய்தார். அந்த ஓவரின் 3வது பந்திலேயே கேப்டன் பவுமா போல்டாகி 11 ரன்களில் எடுத்து வெளியேறினார். தொடர்ட்ந்து 13ஆவது வீச மீண்டும் ஜடேஜா அழைக்கப்பட்டார். அப்போது களத்தில் இருந்த கிளாஸன் 9 பந்துகளை எதிர்கொண்டு ஒரு ரன்னை கூட எடுக்காமல் இருந்தார். அதேபோல் ஸ்பின்னர்களை எதிர்கொள்ள முடியாமல் ஸ்வீப் ஷாட் ஆடுவதையே கிளாஸன் வழக்கமாக கொண்டிருந்தார். இதனை கணித்த ஜடேஜா முதல் 4 பந்துகளை பிட்ச் செய்து வீசிய நிலையில், 5ஆவது பந்தை கிளாஸனின் கால்களுக்கு வீசினார்.
அப்போது ஸ்வீப் ஷாட் ஆட முயன்ற கிளாஸன் பந்தை தவறவிட, அது அவரின் கால்களில் பட்டு சென்றது. இதனால் ஜடேஜா உடனடியாக டிஆர்எஸ் எடுக்குமாறு கேப்டன் ரோகித் சர்மாவிடம் கெஞ்சினார். இதற்கு ரோஹித் சர்மா, விக்கெட் கீப்பர் கேஎல் ராகுலிடம் ஆலோசனை கேட்க, கேஎல் ராகுல் முழுமையாக எதையும் கூறவில்லை.
இருப்பினும் ஜடேஜாவின் பேச்சை கேட்டு ரோஹித் சர்மா டிஆர்எஸ் முறையீட்டுக்கு செல்ல, அது இந்திய அணிக்கு சாதகமான முடிவை கொடுத்தது. இதன் மூலமாக தென்னாப்பிரிக்கா அணி 40 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. இதன்பின் மில்லரையும் 11 ரன்களில் வீழ்த்தி அசத்தினார். இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 78 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
Win Big, Make Your Cricket Tales Now