
இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஓருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 31ஆவது லீக் போட்டியானது இன்று கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும், ஷாகிப் அல் ஹசன் தலைமையிலான வங்கதேச அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற வங்கதேச அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய அந்த அணி பாகிஸ்தான் அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 45.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 204 ரன்களை குவித்தது. வங்கதேச அணி சார்பாக துவக்க வீரர் லிட்டன் தாஸ் 45 ரன்களையும், கேப்டன் ஷாகிப் அல் ஹசன் 43 ரன்களையும், முகமதுல்லா 56 ரன்களையும் குவித்து அசத்தினர்.
பாகிஸ்தான் அணி சார்பாக ஷாஹின் அqப்ரிடி மற்றும் முகமது வாசிம் ஜூனியர் தலா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினர். பின்னர் தொடர்ந்து 205 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பாகிஸ்தான் அணியானது 32.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 205 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி சார்பாக துவக்க வீரர்கள் அப்துல்லா ஷஃபீக் 68 ரன்களும், ஃபகர் ஸமான் 81 ரன்களையும் குவித்து அசத்தினர்.