
ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று பெங்களூருவில் நடைபெற்ற 35ஆவது லீக் போட்டியில் நியூசிலாந்தை டக்வொர்த் லூயிஸ் விதிமுறைப்படி 21 ரன்கள் பாகிஸ்தான் தோற்கடித்தது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்து வீசிய பாகிஸ்தானை அதிரடியாக எதிர்கொண்ட நியூசிலாந்து 50 ஓவர்களில் 401/6 ரன்கள் குவித்து ஆரம்பத்திலேயே அசத்தியது.
அந்த அணிக்கு அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா 108, கேப்டன் கேன் வில்லியம்சன் 95 ரன்கள் எடுத்த நிலையில் பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக முகமது வாசிம் 3 விக்கெட்டுகள் சாய்த்தார். அதைத்தொடர்ந்து 402 என்ற கடினமான இலக்கை துரத்திய பாகிஸ்தானுக்கு அப்துல்லா ஷஃபிக் 4 ரன்களில் சௌதீ வேகத்தில் அவுட்டானாலும் ஃபகர் ஸமான் அதிரடியாக விளையாடினார். குறிப்பாக மழை வரும் என்பதால் வேகமாக விளையாட வேண்டும் என்பதை தெரிந்து கொண்ட அவர் 63 பந்துகளில் சதமடித்து மிரட்டினார்.
மறுபுறம் கேப்டன் பாபர் அசாம் தம்முடைய பங்கிற்கு 66 ரன்களும் ஃபகர் ஸமான் 126 ரன்களும் எடுத்ததால் 25.3 ஓவரில் பாகிஸ்தான் 200/1 ரன்கள் எடுத்திருந்த போது மழை வந்து போட்டியை நிறுத்தியது. அப்போது நியூசிலாந்தை விட 21 முன்னிலை பெற்றதன் காரணமாக வென்ற பாகிஸ்தான் தங்களுடைய அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது.