WPL 2023: பரபரப்பான ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் த்ரில் வெற்றி!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.

மகளிர் பிரீமியர் லீக் தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்றைய போட்டியில் வலுவான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி எதிர்கொண்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.
அதன்படி களமிறங்கிய குஜராத் ஜெயண்ட்ஸ் அணியில் சோபி டங்க்லி 4 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். இதையடுத்து வோல்வாட்டுடன் இணைந்த ஹர்லீன் தியோல் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
அதன்பின் அரைசதம் கடப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 31 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். இதையடுத்து களமிறங்கிய ஆஷ்லே கார்ட்னர் ஆரம்பத்தில் நிதானமாக விளையாடினாலும், இறுதிக்கட்டத்தில் அதிரடி காட்டினார். அதேசமயம் மறுமுனையில் அபாரமாக விளையடைய லாரா வோல்வார்ட் அரைசதம் கடந்து அசத்தினார்.
பின்னர் 45 பந்துகளில் 6 பவுண்டரி, ஒரு சிக்சர் என 57 ரன்களைச் சேர்த்த நிலையில் லாரா வோல்வார்ட் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். ஆனாலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஆஷ்லே கார்ட்னர் 32 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து 51 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்களைச் சேர்த்தது. டெல்லி கேப்பிட்டல்ஸ் தரப்பில் ஜெஸ் ஜொனசன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் அதிரடியாக விளையாட முயன்ற ஷாஃபாலி வர்மா 8 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் கேப்டன் மெக் லெனிங் 18 ரன்களிலும், அலிஸ் கேப்ஸி 22 ரன்களிலும், ஜேமிமா ரோட்ரிஸ்க் ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
பின்னர் களமிறங்கிய மரிசேன் கேப் ஒருபக்கம் அதிரடியாக விளையாட மறுமுனையில் களமிறங்கிய வீராங்கனைகள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதற்கிடையில் 36 ரன்களைச் சேர்த்திருந்த மரிசேன் கேப்பும் ஆட்டமிழந்தார். இறுதியில் அருந்ததி ரெட்டி, ஷிகா பாண்டே இணை அதிரடியாக விளையாடி அணியை இலக்கை நோக்கி அழைத்துச் சென்றனார்.
ஆனால் ஆட்டத்தில் இறுதிகட்டத்தில் அருந்ததி ரெட்டி 25 ரன்னில் ஆட்டமிழக்க, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 136 ரன்களை மட்டுமே எடுத்தது. குஜராத் அணி தரப்பில் கிம் கார்த், கன்வர், ஆஷ்லே கார்ட்னர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இதன்மூலம் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது.
Win Big, Make Your Cricket Tales Now