WPL 2024: ஷஃபாலி வர்மா, மெக் லெனிங் அதிரடியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அபார வெற்றி!
யுபி வாரியர்ஸ் அணிக்கெதிரான டபிள்யூபிஎல் லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூபிஎல்) தொடரின் இரண்டாவது நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 4ஆவது லீக் ஆட்டத்தில் அலிசா ஹீலி தலைமையிலான யுபி வாரியர்ஸ் அணியும், மெக் லெனிங் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தியது. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய யுபி அணிக்கு கேப்டன் அலிசா ஹீலி - வ்ருந்தா தினேஷ் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர்.
இதில் வ்ருந்தா அரவிந்த் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய அதிரடி வீராங்கனை தஹ்லியா மெக்ராத்தும் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அவரைத்தொடர்ந்து கேப்டன் அலிசா ஹீலியும் 13 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, யுபி அணி 16 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. பின்னர் ஜோடி சேர்ந்த கிரேஸ் ஹாரிஸ் - ஸ்வேதா ஷெராவத் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் கிரேஸ் ஹாரிஸ் 17 ரன்களுக்கும், அடுத்து களமிறங்கிய கிரண் நவ்கிரே 10 ரன்களுக்கும், பூனம் கெமார் 10 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
Trending
அதேசமயம் மறுபக்கம் அரைசதம் கடப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்வேதாவும் 5 பவுண்டரி, ஒரு சிக்சர் என 45 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். இறுதியில் தீப்தி ஷர்மா, சோபி எக்லெஸ்டோன் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, யுபி வாரியர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 119 ரன்களை மட்டுமே எடுத்தது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தரப்பில் மரிஸான் கேப் 3 விக்கெட்டுகளையும், ராதா யாதவ் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.
இதையடுத்து 120 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு கேப்டம் மெக் லெனிங் - ஷஃபாலி வர்மா இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்ததுடன், அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி மிரட்டினர். இதில் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷஃபாலி வர்மா 36 பந்துகளில் அரைசதம் கடந்த நிலையில், மெக் லெனின் 42 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார்.
இதில் இருவரும் இணைந்து 119 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் கேப்டன் மெக் லெனிங் 51 ரன்களில் ஆட்டமிழந்து ஆட்டத்தை முடிக்க முடியாமல் பெவிலியன் திரும்பினார். அதேசமயம் மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷஃபாலி வர்மா 6 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 64 ரன்களைச் சேர்த்து வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 14.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 9 விக்கெட் வித்தியாசத்தில் யுபி வாரியர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
Win Big, Make Your Cricket Tales Now