
இந்தியாவில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வரும் டபிள்யூபிஎல் டி20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 8ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் யுபி வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற யுபி வாரியர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங்கைத் தொடங்கிய குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கு லாரா வோல்வார்ட் - கேப்டன் பெத் மூனி இணை தொடக்கம் கொடுத்தனர். சிறப்பாக தொடங்கிய இந்த இணையில் பெத் மூனி 16 ரன்களுக்கும், லாரா வோல்வேர்ட் 28 ரன்களையும் சேர்த்து விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய ஹர்லீன் தியோல் 24 பந்துகளை எதிர்கொண்டு 18 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.
இதனால் குஜராத் அணி 83 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் ஜோடி சேர்ந்த போப் லிட்ச்ஃபீல்ட் - ஆஷ்லே கார்ட்னர் இணை தொடக்கத்தில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினர். பின்னர் இருவரும் இணைந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசித் தள்ள அணியின் ஸ்கோரும் சீரான வேகத்தில் உயர்ந்தது.