
இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வரும் இரண்டாவது சீசன் மகளிர் பிரீமியர் லீக் தொடர் மீதான ரசிகர்களின் ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. அதேசமயம் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின.
அதன்படி இன்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஆர்சிபி அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா - சோஃபி டிவைன் இணை முதல் இரண்டு ஓவர்களில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்தனர்.
அதன்பின் 10 ரன்கள் எடுத்த நிலையில் சோஃபி டிவைன் தனது விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 10 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஸ்மிருதி மந்தனாவும் தனது விக்கெட்டை இழந்தார். இதையடுத்து களமிறங்கிய எல்லி ஸ்பெர்ரி வழக்கம்போல் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். ஆனால் மறுபக்கம் களமிறங்கிய திசா கசத் ரன்கள் ஏதுமின்றியும், ரிச்சா கோஷ் 14 ரன்களுக்கும், சோஃபி 11 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர்.