WPL 2024: ஆர்சிபியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கெதிரான டபிள்யூபிஎல் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
இந்தியாவில் நடைபெற்று வரும் மகளிர் பீர்மியர் லீக் தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 9ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு கேப்டன் ஸ்மிருதி மந்தனா - சோஃபி டிவைன் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். இதில் கடந்த போட்டியில் காட்டிய அதே அதிரடி பாணியில் இன்னிங்ஸைத் தொடங்கிய ஸ்மிருதி மந்தனா 9 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து சோஃபி டிவைனும் 9 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.
Trending
பின்னர் களமிறங்கிய எல்லிஸ் பெர்ரி ஒருமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், மறுபக்கம் களமிறங்கிய மேகனா 11 ரன்களுக்கும், ரிச்சா கோஷ் 7 ரன்களுக்கும், சோஃபி மோலினக்ஸ் 12 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் ஆர்சிபி அணி 71 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் எல்லிஸ் பெர்ரியுடன் இணைந்த ஜார்ஜியா வேர்ஹாமும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இருவரும் இணைந்து 6ஆவது விக்கெட்டிற்கு 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் 27 ரன்கள் எடுத்திருந்த ஜார்ஜியா வேர்ஹாம் தனது விக்கெட்டை இழந்தார். ஆனாலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த எல்லிஸ் பெர்ரி 44 ரன்களையும், ஷ்ரேயங்கா பாட்டில் 7 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி அணி 6 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்களை எடுத்தது.
இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஹீலி மேத்யூஸ் - யஷ்திகா பட்டியா ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். இருவரும் தொடக்கம் முதலே பவுண்டரியும் சிக்சர்களுமாக விளாச முதல் விக்கெட்டிற்கு 45 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதன்பின் யஷ்திகா பாட்டியா 31 ரன்களுக்கும், ஹீலி மேத்யூஸ் 26 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர்.
அதன்பின் இணைந்த நாட் ஸ்கைவர் பிரண்ட் - அமெலிய கெர் இணையும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதன்பின் நாட் ஸ்கைவர் 27 ரன்களுக்கும் விக்கெட்டை இழந்தாலும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அமெலியா கெர் 7 பவுண்டரிகளுடன் 40 ரன்களையும், பூஜா வஸ்திரேகர் 8 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 15.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
Win Big, Make Your Cricket Tales Now