
மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூபிஎல்) தொடரின் இரண்டாவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 11ஆவது லீக் போட்டியில் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து, அலிசா ஹீலி தலைமையிலான யுபி வாரியர்ஸ் அணி பலபப்ரீட்சை நடத்துகிறது. பெங்களூருவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற யுபி வாரியர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு வழக்கத்திற்கு மாறாக கேப்டன் ஸ்மிருதி மந்தனாவுடன் சபினேனி மேகனா தொடக்கம் கொடுத்தார். வழக்கமாக சோஃபி டிவைன் தொடக்க வீராங்கனையாக களமிறங்கி வந்த நிலையில் இன்று, மேகனாவிற்கு தொடக்க வீராங்கனை வாய்ப்பு கிடைத்தது. அதன்படி இருவரும் இணைந்து தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர்.
இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 51 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் மேகனா 28 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய எல்லிஸ் பெர்ரியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுமுனையில் அதிரடி ஆட்டத்தில் மிரட்டி வந்த ஸ்மிருதி மந்தனா 31 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதுமட்டுமின்றி இருவரும் இணைந்து 94 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர்.