
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 3ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 17ஆவது லீக் போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்த்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற குஜராத் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு கேப்டன் மெக் லெனிங் மற்றும் ஷஃபாலி வர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி பவுண்டரிகளும், சிக்ஸர்களையும் பறக்கவிட்டு எதிரணியை அழுத்தத்தில் தள்ளினர். இதன்மூலம் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 83 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். அதன்பின் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஷஃபாலி வர்மா 3 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 40 ரன்களைச் சேர்த்த கையோடு விக்கெட்டை இழக்க, மறுமுனையில் கேப்டன் மெக் லெனிங் தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார்.
அதேசமயம் அடுத்து களமிறங்கிய ஜெஸ் ஜோனசன் 9 ரன்களிலும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 4 ரன்னிலும், அனபெல் சதர்லேண்ட் 14 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் இப்போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் மெக் லெனிங் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 15 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 92 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். இதனால் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்களைச் சேர்த்தது. குஜராத் ஜெயண்ட்ஸ் அணி மேகனா சிங் 3 விக்கெட்டுகளையும், டியான்டிரா டோட்டின் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.