
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் மூன்றாவது சீசன் நேற்று கோலாகலமாக தொடங்கியது. வதோதராவில் நடைபெற்ற இப்போட்டியில் நடப்பு சாம்பியன்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து குஜராத் ஜெயண்ட்ஸை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய குஜராத் ஜெயண்ட்ஸ் அணியானது பெத் மூனி மற்றும் ஆஷ்லே கார்ட்னர் ஆகியோரின் அதிரடியான அரைசதத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் மட்டுமே இழந்த நிலையில் 201 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஆஷ்லே கார்ட்னர் 3 பவுண்டரி, 8 சிஸர்கள் என 79 ரன்களையும், பெத் மூனி 56 ரன்களையும் சேர்த்தனர்.
இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தொடக்க வீராங்கனைகள் சொதப்பிய நிலையில், எல்லிஸ் பெர்ரி 6 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 57 ரன்களையும், இறுதிவரை அதிரடியாக விளையாடிய ரிச்சா கோஷ் 7 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 64 ரன்களையும், கனிகா அஹுஜா 30 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் ஆர்சிபி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் வீழ்த்தியது.