எப்போதும் முன்னேற வேண்டிய பகுதிகள் உள்ளன - மெக் லெனிங்!
இத்தொடரில் இதுவரையிலான போட்டியில் எங்கள் அணியின் சிறந்த செயல்திறன் இதுதான் என்று நான் நினைக்கிறேன் என டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் மெக் லெனிங் தெரிவித்துள்ளார்.

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற 6ஆவது லீக் போட்டியில் யுபி வாரியர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. வதோதராவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த யுபி வாரியர்ஸ் அணிக்கு கிரண் நவ்கிரே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியதுடன் அரைசதம் கடந்து அசத்தினார். அதன்பின் 51 ரன்களில் நவ்கிரே தனது விக்கெட்டை இழந்தார்.
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய வீராங்கனைகளில் ஸ்வேதா செஹ்ராவத் 37 ரன்களையும், சினெல்லே ஹென்றி 33 ரன்களையும் சேர்த்ததன் மூலம், 20 ஓவர்கள் முடிவில் யுபி வாரியர்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்களைச் சேர்த்தது. இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு ஷஃபாலி வர்மா மற்றும் கேப்டன் மெக் லெனிங் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர்.
Trending
இதில் ஷஃபாலி வர்மா 26 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் மெக் லெனிங் அரைசதம் கடந்து அசத்திய நிலையில் 69 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய அனபெல் சதர்லேண்ட் 4 பவுண்டரிகளுடன் 41 ரன்களையும், மரிஸான் கேப் 4 பவுண்டரிகளுடன் 29 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 19.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் யுபி வாரியர்ஸ் அணியை வீழ்த்தியது.
இந்நிலையில் இப்போட்டியின் வெற்றி குறித்து பேசிய டெல்லி அணி கேப்டன் மெக் லெனிங், “வெற்றி பெற்ற பக்கத்தில் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இன்றிரவு எங்கள் அணிக்கு மிகவும் சிறப்பான நாளாக அமைந்தது. இப்போட்டியின் முதல் பந்திலிருந்தே நாங்கள் முன்னிலையில் இருந்ததாக உணர்ந்தேன். எங்களிடம் சில உலகத் தரம் வாய்ந்த வீரர்கள் இருந்தனர். முதலில் நாங்கள் 200 ரன்களுக்கு மேல் என்ற இலக்கை விரட்டுவோம் என்ற் நினைத்தோம்.
Also Read: Funding To Save Test Cricket
ஆனால் எங்கள் அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு எதிரணியை கட்டுப்படுத்தினர். ஏனெனில் சரியான நேரத்தில் விக்கெட்டுகளை வீழ்த்துவது மிகவும் முக்கியமானது. இருப்பினும் எப்போதும் முன்னேற வேண்டிய பகுதிகள் உள்ளன, ஆனால் இத்தொடரில் இதுவரையிலான போட்டியில் எங்கள் அணியின் சிறந்த செயல்திறன் இதுதான் என்று நான் நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now