
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 3ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 16ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - யுபி வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தியது. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய யுபி வாரியர்ஸ் அணிக்கு கிரேஸ் ஹாரிச் மற்றும் ஜார்ஜியா வோல் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் இணைந்து தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். இதன்மூலம் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 74 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், கிரேஸ் ஹாரிஸ் 3 பவுண்டரி ஒரு சிக்ஸர் உள்பட 28 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார்.
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கிரன் நவ்கிரே ரன்கள் ஏதுமின்றி நடையைக் கட்ட, மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜார்ஜியா வோல் டபிள்யூபிஎல் தொடரில் தனது முதல் அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். பின் 12 பவுண்டரிகளுடன் 55 ரன்களைச் சேர்த்த நிலையில் ஜார்ஜியா வோல் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் தீப்தி சர்மா நிதானமாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார்.