
உலகின் மிக வெற்றிகரமான டி20 தொடரான ஐபிஎல் தொடரை இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தி வருவதைப் போல மகளிரைக் கொண்டு புதிதாக மகளிர் பிரீமியர் லீக் தொடரை நடத்த முடிவு செய்திருக்கிறது பிசிசிஐ. இந்த தொடருக்கு ஒவ்வொரு அணிக்கும் அதிகபட்சமாக 12 கோடிகள் ஏலத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அணியும் குறைந்தது 15 அதிகபட்சமாக 18 வீராங்கனைகளை வாங்க வேண்டும்.
அதேபோல் ஒவ்வொரு அணியிலும் எட்டு வெளிநாட்டு வீராங்கனைகள் இருக்க வேண்டும். இதேபோல் விளையாடும் அணியில் ஐந்து வெளிநாட்டு வீராங்கனைகள் இருக்கலாம். அதில் ஒருவர் அசோசியேட் கிரிக்கெட் நாட்டைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
இப்படியான விதிமுறைகள் வகுக்கப்பட்டு இன்று மகளிர் ஐபிஎல் தொடருக்கான ஏலம் நடைபெற்று வந்தது. இந்த ஏலத்தில் இந்திய அணியின் நட்சத்திர துவக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா அதிகபட்சமாக அணியின் மொத்த பணத்தில் 27 சதவீதத்துக்கு ஏலத்தில் போனார். அதாவது 3.40 கோடிக்கு ஏலத்திற்கு போனார். சதவிகித அடிப்படையில் இது மிகப்பெரிய தொகையாகும்.