
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் அங்கமாக நடைபெற்றுவரும் இங்கிலாந்து - இலங்கை மற்றும் பாகிஸ்தான் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது முடிவடைந்துள்ளது. அதன்படி இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியும், பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணியும் வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றி அசத்தியுள்ளன.
இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான புதுபிக்கப்பட்ட புள்ளிப்பட்டியல் இன்று வெளியாகியுள்ளது. அந்தவகையில் புதுபிக்கப்பட்ட இந்திய புள்ளிப்பட்டியலில் முதல் மூன்று இடங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதன்படி இந்த பட்டியலில் இந்திய அணி 68.52 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்திலும், ஆஸ்திரேலிய அணி 62.50 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் நீடிக்கின்றனர். அதேசமயம் நியூசிலாந்து அணியானது 50 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் நீடிக்கின்றன.
அதேசமயம் பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றி அசத்திய வங்கதேச அணியானது 45.83 புள்ளிகளைப் பெற்றுள்ளதுடன், இந்த புள்ளிப்பட்டியலின் நான்காம் இடத்திற்கும் முன்னேறி அசத்தியுள்ளது. மேற்கொண்டு இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றாலும் 45 புள்ளிகளை மட்டுமே பெற்று இப்பட்டியலில் 5ஆம் இடத்தையே பிடித்துள்ளது. முன்னதாக இங்கிலாந்து அணி நான்காம் இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.