உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: வெளிச்சமின்மை காரணமாக இரண்டாம் நாள் ஆட்டம் பாதியிலேயே முடிவு!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் போதிய வெளிச்சமின்மை காரணமாக இரண்டாம் நாள் ஆட்டம் 64.4 ஓவர்களுடன் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி சவுத்தாம்ப்டன் ஏஜியஸ் பவுல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்துவரும் இந்திய அணி மதிய உணவு இடைவெளி வரை 2 விக்கெட் இழப்பிற்கு 69 ரன்கள் எடுத்தது. புஜாரா பூஜ்யத்திலும், கோலி 6 ரன்னிலும் போட்டியின் இரண்டாம் செசனை தொடங்கினர்.
Trending
மிக மிகப் பொறுமையாக ஆட்டத்தை வெளிப்படுத்திய புஜாரா தான் சந்தித்த முதல் 35 பந்துகளில் ஒரு ரன் கூட எடுக்கவில்லை. அதன்பின் 36ஆவது பந்தில் (வாக்னர் பந்துவீச்சு) பவுண்டரி அடித்து, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தன்னுடைய ரன் கணக்கை தொடங்கினார். அடுத்தும் வாக்னர் பந்தை பவுண்டரிக்கு விரட்டி தொடர்ச்சியாக அதிர்ச்சியளித்தார்.
மறுமுனையில் கோலி ஆட்டத்தில் 10 ரன்கள் எடுத்தபோது, டெஸ்ட் போட்டிகளில் 7,500 ரன்களை கடந்து பெரும் மைல்கல்லை எட்டினார். உலகளவில் இந்த மைல்கல்லை எட்டும் 42ஆவது டெஸ்ட் வீரர் என்ற பெருமையும், இந்தியாவில் ஆறாவது வீரர் என்ற பெருமையையும் கோலி அடைந்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கரை போலவே கோலி, தன்னுடைய 154ஆவது இன்னிங்ஸில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டு பவுண்டரிகளை தவிர்த்து, ஒரு ரன்னைக் கூட எடுக்காமல் புஜாரா நியூசிலாந்து பவுலர்களுக்கு போக்கு காட்டி வந்தார். ஆனால், அது நீண்டநேரம் நீடிக்கவில்லை. 54 பந்துகளில் 8 ரன்கள் எடுத்திருந்த புஜாரா போல்ட் வீசிய 41ஆவது ஓவரில் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட்டானார்.
சௌதி, போல்ட் என அத்தனை பந்துவீச்சாளர்களையும் அசால்டாக சமாளித்த விளையாடினார் கோலி. பவுண்டரிகளை அடிக்க முயன்று வேகமான ஆட்டத்தை வெளிக்காட்டாமல், சிங்கிள்ல் மூலமாகவே ரன்களைச் சேர்த்து வந்தார். அவருக்கு பக்கபலமாக நின்ற ரஹானேவும் மிகக்கவனமாக விளையாடி வந்தார்.
ஆட்டம் மெதுவாக நகர்ந்துவந்த நிலையில் சவுத்தி 56ஆவது ஓவர் வீசிய போது, போதிய வெளிச்சமின்மை காரணமாக தேனீர் இடைவேளை விடப்பட்டது. தேனீர் இடைவேளையின் போது இந்திய அணி 55.3 ஓவர்களில் 3 வி்க்கெட்கள் இழப்பிற்கு 120 ரன்கள் எடுத்தது.
தேநீர் இடைவேளைக்கு பிறகு ஆட்டம் தொடங்கியது. ஆனால், ஆட்டத்தின் 64.4 ஓவரின் போது மீண்டும் வெளிச்சம் குறைவாக இருந்ததால், ஆட்டம் நிறுத்தப்படுவதாக போட்டி நடுவர்கள் அறிவித்தனர். அதன்பின் தொடர்ந்து வெளிச்சமின்மை காரணமாக இரண்டாம் நாள் ஆட்டம் முடிவுற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதனால் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்களை எடுத்துள்ளது. கோலி 444ரன்களுடனும், ரஹானே 29 ரன்களுடனும் மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளனர்.
Win Big, Make Your Cricket Tales Now