WTC Final, Day 1: ஆதிக்கம் செலுத்தும் பந்துவீச்சாளர்கள்; பேட்டர்கள் தடுமாற்றம்!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 169 ரன்கள் பின் தங்கியுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷி 2025: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 212 ரன்களுக்கு ஆல் அவுட்டான நிலையில், தென் ஆப்பிரிக்க அணியும் தடுமாறி வருகிறது.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் 2023-25ஆம் ஆண்டிற்கான இறுதிப்போட்டி இன்று லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி பலப்பரீட்சை நடத்தியது. இப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி டாஸை வென்று பந்துவீச்சை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு உஸ்மான் கவாஜா - மார்னஸ் லபுஷாக்னே இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷாக்னே, கேமரூன் க்ரீன் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த ஸ்டீவ் ஸ்மித் - பியூ வெப்ஸ்டர் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர். இதில் இருவரும் இணைந்து 70 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில் 10 பவுண்டரிகளுடன் 66 ரன்களை எடுத்திருந்த ஸ்டீவ் ஸ்மித்தும், 11 பவுண்டரிகளுடன் 72 ரன்களைச் சேர்த்திருந்த பியூ வெப்ஸ்டரும் ஆட்டமிழந்தனர்.
அதன்பின் களமிறங்கிய வீரர்களும் சோபிக்க தவறியதால் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 212 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய காகிசோ ரபாடா 5 விக்கெட்டுகளையும், மார்கோ ஜான்சன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் ஐடன் மார்க்ரம் ரன்கள் ஏதுமின்றி முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரர் ரியான் ரிக்கெல்டனும் 16 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.
Also Read: LIVE Cricket Score
மேற்கொண்டு வியான் முல்டர் 6 ரன்களுக்கும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 2 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சி கொடுத்தனர். இதன் காரணமாக முதல்நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட்டுகளை இழந்து 43 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது. இதில் டெம்பா பவுமா 3 ரன்களுடனும், டேவிட் பெடிங்ஹாம் 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளையும், பாட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இதனைத் தொடர்ந்து 169 ரன்கள் பின் தங்கிய நிலையில் தென் ஆப்பிரிக்க அணி நாளை இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now