
பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இத்தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் இன்று முடிவடைந்தது.
இப்போட்டியிலும் அபாரமாக செயல்பட்ட ஆஸ்திரேலிய அணியானது 3 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்த வெற்றியின் மூலம் தற்போது ஆஸ்திரேலிய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் நியூசிலாந்தை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது.
முன்னதாக புள்ளிப்பட்டியலின் முதலிடத்தில் நியூசிலாந்து அணி கடந்த வாரம் இருந்தது. ஆனால் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வெற்றிபெற்றதன் மூலம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து அசத்தியது. இந்நிலையில் தான் நியூசிலாந்து அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் தோல்வியைத் தழுவியுள்ளது.