 
                                                    இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டிஸ் அணிகள் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடின. இதில் 1-0 என்ற கணக்கில் இந்தியா வென்றது. இரண்டாவது போட்டி மழை காரணமாக டிரா ஆனது. இந்தத் தொடரில் இந்திய அணி வீரர்களின் ஆதிக்கம் அதிகம் இருந்தது. அது பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் இருந்ததை பார்க்க முடிந்தது.
இளம் வீரர் ஜெய்ஸ்வால் இரண்டு போட்டிகளையும் சேர்த்து 266 ரன்கள் சேர்த்திருந்தார். கேப்டன் ரோஹித் 240 ரன்கள், விராட் கோலி 197 ரன்கள் எடுத்திருந்தனர். பந்து வீச்சாளர்களில் அதிகபட்சமாக அஸ்வின் 15 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். இந்நிலையில், அஸ்வின் தான் இந்தத் தொடரில் தனது தொடர் நாயகன் என முன்னாள் இந்திய வீரர் ஜாகீர் கான் தெரிவித்துள்ளார்.
இந்தத் தொடரில் தொடர் நாயகன் விருது வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு இன்னிங்ஸில் பேட் செய்து 56 ரன்களும் எடுத்திருந்தார் அஸ்வின். “இந்தத் தொடரில் தொடர் நாயகன் விருது இருந்திருந்தால் அது அஸ்வினுக்கு வழங்கப்பட்டு இருக்க வேண்டும். அவர் அதற்கு தகுதியானவர்” என்று ஜாகீர் கான் தெரிவித்துள்ளார்.
 
                         
                         
                                                 
                         
                         
                         
                        