விதிகளை மீறிய ஆஸ்திரேலிய வீரர்; அபராதம் விதித்த ஐசிசி!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஐசிசியின் நடத்தை விதிகளை மீறியதாக ஆஸ்திரேலிய வீரர் ஆடம் ஸாம்பாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது

ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்க அணிக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று கெய்ர்னில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று முதலில் பந்துவீசுவதாக அறிவித்து தென் ஆப்பிரிக்காவை பேட்டிங் செய்ய அழைத்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணியில் ஐடன் மார்க்ரம் 82 ரன்களையும், கேப்டன் டெம்பா பவுமா 65 ரன்களையும், மேத்யூ பிரீட்ஸ்கி 57 ரன்களையும் சேர்க்க அந்த அணி 50 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 296 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய டிராவிஸ் ஹெட் 4 விக்கெட்டுகளையும், பென் துவார்ஷுயிஸ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
இதனை தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் மிட்செல் மார்ஷ் 88 ரன்களையும், பென் துவார்ஷுயிஸ் 33 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் ஆஸ்திரேலிய அணி 40.5 ஓவர்களில் 198 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் கேசவ் மகாராஜ் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா அணி 98 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலையில் உள்ளது.
இந்த நிலையில் இப்போட்டியில் ஐசிசியின் நடத்தை விதிகளை மீறியதாக ஆஸ்திரேலிய வீரர் ஆடம் ஸாம்பாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்றைய போட்டியின் போது ஆடம் ஸாம்பா மோசமான வார்த்தைகளை பயன்படுத்தினார். மேலும் அது ஸ்டம்ப் மைக்கில் தெளிவாக பதிவானதுடன், நேரலையிலும் கேட்டது. இது ஐசிசியின் நடத்தை விதிகளின் படி குற்றமாகும்.
இதனால் அவருக்கு ஒரு தகுதி இழப்பு புள்ளி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், கடந்த 24 மாதங்களில் இது அவரது முதல் மீறல் என்பதால், அவருக்கு அதிகாரப்பூர்வ எச்சரிக்கை மட்டுமே வழங்கப்பட்டது. ஒரு வீரர் 24 மாதங்களுக்குள் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட குறைபாடு புள்ளிகளைப் பெற்றால், அவை நேரடியாக இடைநீக்கப் புள்ளிகளாக மாற்றப்படும். அதன்படி அந்த வீரர் அடுத்த போட்டியில் விளையாட தடைவிதிக்கப்படுவார்.
Also Read: LIVE Cricket Score
மேலும் ஆடம் ஸாம்பா தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதன் காரணமாக மேற்கொண்டு விசாரணை தேவையில்லை என்பதையும் ஐசிசி தெளிவுபடுத்தியுள்ளது. ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்கா இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டி ஆகஸ்ட் 22ஆம் தேதி மெக்கேயில் நடைபெறவுள்ளது. இது ஆஸ்திரேலியாவுக்கு முக்கியமான போட்டி என்பதால் ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்பார்ப்பு உள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now