
ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்துவரும் அயர்லாந்து அணி தற்போது ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி ஹராரேவில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அந்த அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் கும்பி 5 ரன்களிலும், கமுன்ஹுகம்வே 8 ரன்களிலும், மில்டன் ஷும்பா ரன்கள் ஏதுமின்றியும், சிக்கந்தர் ரஸா 2 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். பின்னர் ஜோடி சேர்ந்த ரியான் பார்ல் - கிளைவ் மடாண்டே இணை ஓரளவு தாக்குப்பிடித்து ஸ்கோரை உயர்த்தினர்.
பின் 38 ரன்களில் ரியான் பார்லும், 33 ரன்களுக்கும் மடாண்டேவும் விக்கெட்டை இழக்க, இறுதியில் மஸகட்ஸா அதிரடியாக விளையாடி 40 ரன்களைச் சேர்த்தார். இதனால் ஜிம்பாப்வே அணி 42.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 166 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அயர்லாந்து அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஜோஷுவா லிட்டில் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.