
அயர்லாந்து அணி தற்போது ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் தற்போது இரு அணிகளுக்கும் இடையே ஒருநாள் தொடரானது நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்து முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து தொடரில் முன்னிலைப் பெற்றது.
இதையடுத்து ஜிம்பாப்வே - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று (பிப்ரவரி 16) ஹராரேவில் உள்ள ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு பிரையன் பென்னட் மற்றும் பென் கரண் இணை தொடக்கம் கொடுத்தனர். இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பிரையன் பென்னட் 30 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.
அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரர் பென் கரனும் 18 ரன்களில் நடையைக் கட்ட, அடுத்து களமிறங்கிய கேப்டன் கிரெய்க் எர்வினும் 4 ரன்களுடன் ஆட்டமிழந்தார். இதனால் ஜிம்பாப்வே அணி 77 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் ஜோடி சேர்ந்த வெஸ்லி மதேவரே - சிக்கந்தர் ரஸா இணை பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த இருவரும் தங்கள் அரைசதங்களை பதிவுசெய்து அசத்தியதுடன், 4ஆவது விக்கெட்டிற்கு 70 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.