
ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த அயர்லாந்து அணி தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. அதன்படி இத்தொடரின் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டியில் அயர்லாந்து அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது. இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணியின் தொடக்க வீரர் கும்பி ஒரு பக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த மறுமுனையில் களமிறங்கிய கமுன்ஹுகம்வே ஒரு ரன்னிலும், கைடானோ 13 ரன்களிலும், இன்னசெண்ட் கையா 5 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர் பின்னர் கும்பியுடன் இணைந்த கேப்டன் சிக்கந்தர் ரஸா நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கும்பி அரைசதம் கடந்த நிலையில் 72 ரன்களுக்கு ஆட்டமிழக்க, சிக்கந்தர் ரஸாவும் 37 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் அந்த அணி 40 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 197 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அயர்லாந்து அணி தரப்பில் ஹுமே, கர்டிஸ் கம்பேர் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.