
ZIM vs SL, 1st T20I: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இலங்கை அணியின் கமிந்து மெண்டிஸ் அதிரடியாக விளையாடி 41 ரன்களைச் சேர்த்ததுடன், அணிக்கு வெற்றியையும் தேடிக்கொடுத்தார்.
இலங்கை அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த ஒருநாள் தொடரில் இலங்கை அணி இரண்டிலும் வெற்றி பெற்று தொடரை வென்றது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் இன்று தொடங்கியது. ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து, ஜிம்பாப்வே அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு பிரையன் பென்னட் - மருமணி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பிரையன் பென்னட் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்திய நிலையில், மறுமுனையில் விளையாடிய மருமணி 7 ரன்னிலும், அடுத்து வந்த சீன் வில்லியம்ஸ் 14 ரன்னிலும், அதிரடியாக விளையாடிய கேப்டன் சிக்கந்தர் ரஸா 28 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். ஒருப்பக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுபக்கம் தொடர்ந்து அபாரமாக விளையாடி வந்த பிரையன் பென்னட் அரைசதம் கடந்து அசத்தினார்.