
ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடர்களில் விளையாடுகிறது. இதில் ஜூலை 30 ஆம் தேதி தொடங்கிய டி20 தொடரின் முதல் போட்டியில் ஜிம்பாப்வே அணியும், 31ஆம் தேதி நடைபெற்ற இரண்டாவது போட்டியில் வங்கதேச அணியும் வெற்றிபெற்று 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளன.
இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று ஹராரேவில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஜிம்பாப்வே அணி இம்முறையும் பேட்டிங் செய்வதாகவே அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு சகாப்வா - கிரேக் எர்வின் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
பின் 17 ரன்களில் சகாப்வா ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய வெஸ்லி மதவெரே, சிக்கந்தர் ரஸா, சீன் வில்லியம்ஸ் ஆகியோர் அடுத்தடுத்து ஒற்றையிலக்க ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். இதைடடுத்து மறுமுனையில் பொறுப்புடன் விளையாடிய கிரேக் எர்வினும் 24 ரன்களில் விக்கெட்டை பறிகொடுக்க, அடுத்து வந்த மில்டன் ஷும்பா 4 ரன்களுக்கு நடையைக் கட்டினார்.