வங்கதேசத்தில் மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 2 போட்டிகளில் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், ஒரு நாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது இந்தியா. அடுத்ததாக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
இந்நிலையில், இந்தியா- வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சட்டோகிராமில் உள்ள ஜாஹூர் அகமது மைதானத்தில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது.
அதன்படி, களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் இதனால் முதல் நாள் ஆட்ட நேரம் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 278 ரன்கள் சேர்த்தது. அதன்பின் 82 ரன்களுடன் இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த ஸ்ரேயாஸ் ஐயர் கூடுதலாக நான்கு ரன்களை மட்டுமே சேர்த்து 86 ரன்களில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இதையடுத்து ஜோடி சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் - குல்தீப் யாதவ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரையும் சிறுக சிறுக உயர்த்தினர்.
தொடர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரையும் பிரிக்க முடியாமல் வங்கதேச பந்துவீச்சளர்கள் திணறி வருகின்றனர். இதனால் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 348 ரன்களைச் சேர்த்துள்ளது. உணவு இடைவேளைக்கு பிறகு களமிறங்கிய இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் அரைசதம் கடந்தார்.
அதன்பின் அஸ்வின் 58 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, மறுமுனையில் அரைசதம் கடப்பார் என எதிர்பார்க்கப்பட்ட குல்தீப் யாதவும் 40 ரன்களோடு பெவிலியன் திரும்பினார். இறுதியில் உமேஷ் யாதாவ் தனது பங்கிற்கு இரண்டு சிக்சர்களை பறக்க விட அணியின் ஸ்கோரும் 400 ரன்களைக் கடந்தது.
அதன்பின் சிராஜும் சிக்சர் அடிக்க முயர்சித்து கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 404 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக புஜாரா 90 ரன்களையும், ஸ்ரேயாஸ் ஐயர் 86 ரன்களையும், அஸ்வின் 58 ரன்களையும் சேர்த்தனர். வங்கதேச தரப்பில் தைஜூல் இஸ்லாம், மெஹிதி ஹசன் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்