இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி பர்மிங்ஹாமில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் முடிவில் இந்திய அணி, 73 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 338 ரன்கள் எடுத்தது. இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 98 ரன்களுடன் தடுமாறியபோது ரிஷப் பந்தும் ஜடேஜாவும் அருமையான கூட்டணியை அமைத்தார்கள். ரிஷப் பந்த் அதிரடியாக விளையாடி 89 பந்துகளில் சதமடித்தார்.
அதன்பிறகும் நன்கு விளையாடி 111 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 19 பவுண்டரிகளுடன் 146 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பந்தும் ஜடேஜாவும் 6-வது விக்கெட்டுக்கு 239 பந்துகளில் 222 ரன்கள் கூட்டணி அமைத்தார்கள். ஜடேஜா 109 பந்துகளில் அரை சதமெடுத்தார். முதல் நாள் முடிவில் ஜடேஜா 83 ரன்களுடனும் ஷமி ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் இருந்தார்கள்.
இந்நிலையில் இன்று ஜடேஜா - ஷமி கூட்டணி பொறுப்புடன் விளையாடி ரன்கள் சேர்த்தது. இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை நன்கு எதிர்கொண்டார் ஷமி. இதனால் ஜடேஜாவால் இயல்பாக விளையாட முடிந்தது. ரசிகர்கள் எதிர்பார்த்தபடி சதத்தைப் பூர்த்தி செய்தார். 183 பந்துகளில் 13 பவுண்டரிகளுடன் சதமடித்தார் ஜடேஜா. இது அவருடைய 3ஆவது டெஸ்ட் சதம்.