இந்திய அணியின் சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் தமிழகத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின். சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி முடிந்த கையோடு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அஸ்வின் அறிவித்தார். அதிலும் குறிப்பாக ஃபேரவல் டெஸ்ட் போட்டியில் கூட விளையாடாமல் அவர் ஓய்வை அறிவித்து ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தினார்.
இந்திய அணிக்காக 2010ஆம் ஆண்டு அறிமுகமான ரவிச்சந்திரன் அஸ்வின் 106 டெஸ்ட், 116 ஒருநாள் மற்றும் 65 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். இதில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தவிர்க்க முடியாத வீரராக வலம் வந்த அஸ்வின் 151 இன்னிங்ஸில் 6 சதங்கள், 14 அரைசதங்கள் என 3503 ரன்களையும், 37 ஐந்து விக்கெட் ஹாலுடன் 537 விக்கெட்டுகளையும் கைப்பற்றி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.
இதுதவிர்த்து 116 ஒருநாள் போட்டிகளில் 707 ரன்களையும், 156 விக்கெட்டுகளையும், 65 டி20 போட்டிகளில் 72 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளார். மேற்கொண்டு 2011ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரை வென்ற இந்திய அணியிலும் அஸ்வின் இடம்பிடித்ததுடன், இந்திய அணி கோப்பையை வெல்வதற்கும் மிகப்பெரும் காரணமாக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
R Ashwin! #Cricket #TeamIndia pic.twitter.com/yfyNURQpZW
— CRICKETNMORE (@cricketnmore) January 25, 2025
இந்நிலையில் சர்வதேச அளவில் இந்திய அணிக்காக மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ள ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு இந்தியாவின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம ஸ்ரீ விருதை வழங்கி இந்திய அரசு கௌரவித்துள்ளது. இதன்மூலம் கபில் தேவ், ராகுல் டிராவிட், மகேந்திர சிங் தோனி, விராட் கோலி போன்ற ஜாம்பவான்கள் பட்டியலில் ரவிச்சந்திரன் அஸ்வினும் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.