அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்ற இத்தொடரில் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இந்தியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தின. இதில் தென் ஆப்பிரிக்க அணி ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தியும், இந்திய அணி இங்கிலாந்தை வீழ்த்தியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளன.
இந்நிலையில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை எதிர்த்து இந்திய அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இதில் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணி முதல் முறையாகவும், இந்திய அணி 10 ஆண்டுகளுக்கு பிறகும் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருப்பதால் இதில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
அதன்படி பார்படாஸில் உள்ள கென்ஸிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து தென் ஆப்பிரிக்க அணியை பந்துவீச அழைத்துள்ளது. இன்றைய போட்டிக்கான இரு அணிகளிலும் எந்தவித மாற்றங்களும் செய்யப்படாமல் அதே பிளேயிங் லெவனுடன் விளையாடவுள்ளது.
இந்தியா: ரோஹித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பந்த், சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா.
தென் ஆப்பிரிக்கா: குயின்டன் டி காக், ரீசா ஹென்ட்ரிக்ஸ், ஐடன் மார்க்ரம் (கேப்டன்), ஹென்ரிச் கிளாசன், டேவிட் மில்லர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், மார்கோ ஜான்சென், கேசவ் மகாராஜ், ககிசோ ரபாடா, அன்ரிச் நோர்ட்ஜே, தப்ரைஸ் ஷம்சி.