ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 9ஆவது பதிப்பு அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 20 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் லீன் சூற்று போட்டிகள் நிறைவடைய உள்ள நிலையில் எந்த 8 அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகின்றன. அந்தவகையில் இன்று நடைபெறும் முக்கியமான லீக் ஆட்டத்தில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள இந்தியா மற்றும் அமெரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
அதன்படி நியூயார்க்கில் உள்ள நசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளார். இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. அதேசமயம் அமெரிக்க அணியானது மூன்று மாற்றங்களை செய்துள்ளதுடன் அணியின் கேப்டன் மொனாங்க் படேல் இன்றைய போட்டியில் விளையாடவில்லை.
மேலும், நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இவ்விரு அணிகளும் இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலின் முதலிரண்டு இடங்களில் நீடித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக இரு அணிகளும் பாகிஸ்தானுக்கு எதிராக வெற்றியைப் பதிவுசெய்த கையோடு இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளதால் இதில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
அமெரிக்கா: ஸ்டீவன் டெய்லர், ஷயான் ஜஹாங்கீர், ஆண்ட்ரிஸ் கௌஸ், ஆரோன் ஜோன்ஸ்(கே), நிதிஷ் குமார், கோரி ஆண்டர்சன், ஹர்மீத் சிங், ஷாட்லி வான் ஷால்க்விக், ஜஸ்தீப் சிங், சவுரப் நேத்ரவல்கர், அலி கான்
இந்தியா: ரோஹித் சர்மா(கே), விராட் கோலி, ரிஷப் பந்த், சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ்.