
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 8ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. மேற்கொண்டு இரு அணிகளும் வெற்றிக்கு பிறகு இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி ஒரு சிறப்பு சாதனையை படைக்கும் வாய்ப்பைப் பெறுவார். அதன்படி இந்த போட்டியில் விராட் கோலி 55 ரன்கள் எடுத்தால், டி20 கிரிக்கெட்டில் 13000 ரன்களை நிறைவு செய்வார். இதன் மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி தரப்பில் இந்த மைல் கல்லை எட்டும் முதல் வீரர் மற்றும் உலகின் 5ஆவது வீரர் எனும் சாதனையை அவர் படைக்கவுள்ளார்.
முன்னதாக டி20 கிரிக்கெட்டில் இதுவரை கிறிஸ் கெய்ல், அலெக்ஸ் ஹேல்ஸ், சோயிப் மாலிக் மற்றும் கீரோன் பொல்லார்ட் மட்டுமே இந்த சாதனையை படைத்துள்ள நிலையில், அவர்களிம் பட்டியலில் விராட் கோலியும் இணையும் வாய்ப்பை பெற்றுள்ளார். விராட் கோலி இதுவரை 400 டி20 போட்டிகளில் பங்கேற்று 383 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள நிலையில் அதில் 12945 ரன்களைக் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.