ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது வரும் ஜூன் மாதம் முதல் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் கோலாகலமாக தொடங்கவுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைக்கும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
இதனைத்தொடர்ந்து இத்தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் பயிற்சி ஆட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. அந்தவகையில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும் வரும் ஜூன் 1ஆம் தேதி வங்கதேச அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்கவுள்ளது. தற்சமயம் அமெரிக்க சென்றுள்ள இந்திய அணி வீரர்கள் தங்களது பயிற்சிகளை மேற்கொள்ளும் காணொளியையும் பிசிசிஐ இன்று வெளியிட்டது.
இந்நிலையில் நடப்பு டி20 உலக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி மிகப்பெரும் சாதனை ஒன்றையும் முறியடிக்க வாய்ப்புள்ளது. அதன்படி, டி20 உலகக்கோப்பை வரலாற்றில் அதிக பவுண்டரிகளை அடித்த வீரராக இலங்கையின் ஜெயவர்த்தனே 111 பவுண்டரிகளுடன் முதலிடத்தில் இருக்கிறார். அவருக்கு அடுத்து விராட் கோலி 103 பவுண்டரிகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.
இந்நிலையில் நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விராட் கோலி மேற்கொண்டு 9 பவுண்டரிகள் அடிக்கும் பட்சத்தில் டி20 உலகக்கோப்பை வரலாற்றில் அதிக பவுண்டரிகள் அடித்த வீரர் என்ற மாபெரும் சாதனையை படைப்பார். மேலும் இந்தாண்டு டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அதிகபட்ச போட்டிகளில் விளையாடும் என்பதால் விராட் கோலியால் இந்த சாதனையை எளிதில் முறியடிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.