சுழற்பந்துவீச்சின் தனிக்காட்டு ராஜா ‘ஆஷ்’ #HappyBirthdayAshwin
இந்திய அணியில் குறுகிய காலத்தில் பல சாதனைகளை தன்வசம் கொண்டுவந்த சுழற்பந்து வீச்சாளர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வினின் 35ஆவது பிறந்தநாள் இன்று.
இந்திய அணியின் 'அண்டர் 17’அணிக்காக தொடக்க வீரராக களமிறக்கப்பட்ட அந்தச் சிறுவன் பின்னாட்களில் நட்சத்திர பேட்ஸ்மேன்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்குவார், என யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
முதலில் பேட்ஸ்மேனாக அறிமுகமான அஸ்வின் பின்னாட்களில் தனது 'கேரம்பால் யுக்தி'யின் மூலம் பல முன்னணி பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை சொல்லி எடுத்துள்ளார். இவரின் இத்திறமையினால் 2009 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தனது முதல் போட்டியில் களமிறங்கினார்.
Trending
அதனைத்தொடர்ந்து அடுத்த ஆண்டே தோனியின் கீ பவுலர் என்ற இலக்கை எட்டிப்பிடித்தார். 2010ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் டி20 தொடரில் வேகப்பந்து வீச்சாளர்களே ஆட்டத்தின் பவர்பிளேவில் ஓவரை வீச தயங்கிய நிலையில் ஆஃப் ஸ்பின்னரான அஸ்வின் பவர்பிளேவில் சகஜமாக தனது ஓவர்களை வீசியது மட்டுமில்லாமல் விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
அந்தத் தொடரிலிருந்து தொடங்கிய அஸ்வினின் வெற்றிப் பயணம் அந்த ஆண்டு சென்னை அணி கோப்பையை வெல்ல காரணமாகவும் அமைந்தது. அதே ஆண்டே ஜிம்பாப்வேவில் நடைபெற்ற இந்தியா- இலங்கை-ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் தொடரில் இலங்கைக்கு எதிரான போட்டியில் தனது கால்தடத்தை பதித்தார்.
அங்கிருந்து தொடங்கிய அஸ்வினின் சர்வதேச கிரிக்கெட் பயணம் 2011ஆம் ஆண்டு உச்சத்தை அடைந்தது. ஆம் ஒற்றைத் தமிழனாய் இந்திய உலகக்கோப்பை அணியில் வலம்வந்த அஸ்வின் 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி கோப்பை வெல்வதற்கும் உறுதுணையாக இருந்தார்.
அதனைத் தொடர்ந்து 2011ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஹர்பஜன் சிங்கிற்கு பதிலாக இந்த இளம்புயல் அணியில் சேர்க்கப்பட்டார். தான் கலந்துகொண்ட முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியிலேயே ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரின் கவனத்தையும் தன்வசம் ஈர்த்தார். அந்தத் தொடரில் மட்டும் அவர் 22 விக்கெட்டுகளை வீழ்த்தி தனது முதல் தொடரிலேயே தொடர் நாயகன் விருதையும் பெற்றார்.
- 615 Intl. wickets
— CRICKETNMORE (@cricketnmore) September 17, 2021
- Fastest to 250, 300, 350 Test Wickets
- Most Man Of Series Awards for India in Test : 8
- One Of India's Greatest Match Winners
Nightmare For Left Handed Batsmen, Happy Birthday @ashwinravi99#CricketTwitter #RavichandranAshwin pic.twitter.com/EoXcXYPuDh
அதன்பின் அவர் சாதனைகளின் உச்சத்தை அடையும் விதமாக குறைந்த சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி 50... 100... 150... 200... 250... 300 என அனைத்து நிலைகளிலும் அதிவேக விக்கெட்டுகள் எடுத்து சாதனைக்கு மேல் சாதனை படைத்துவந்தார்.
பந்துவீச்சில் தனது திறமையை பறைசாற்றிய அஸ்வின் 2013ஆம் ஆண்டு நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்டில் இக்கட்டான நிலையிலிருந்த இந்திய அணிக்கு சதமடித்து கைகொடுத்தார். அந்த இன்னிங்ஸில் அவர் ரோகித் சர்மாவுடன் ஏழாவது விக்கெட்டுக்கு இணைந்து 280 ரன்கள் என்ற பார்ட்னர்ஷிப்பை கொடுத்தார்.
இதுநாள் வரை டெஸ்ட் கிரிக்கெட்டில் ஏழாவது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் சேர்த்த ஜோடி என்ற புதிய சாதனைக்கும் சொந்தக்காரரானார். அதன் பின் 2016 ஆண்டு ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருதை வென்றார்.
அதன்பின் இந்தியாவின் ஒருநாள் கிரிக்கெட் அணியில் இளம் மணிகட்டு பந்துவீச்சாளர்கள் வருகையினால் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டார் அஸ்வின். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனக்கான தனி இடத்தை தக்கவைத்துக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, 2018ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக செயல்பட்டுவந்த அவர், ரைட் டூ மேட்ச் முறையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு ஒப்பந்தமானா. அதிலும் கடந்த சீசனில் மான்கட் முறையில் ஜாஸ் பட்லரின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் மீண்டும் பிரபலமடையத் தொடங்கினார்.
இருப்பினும் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை இந்திய அணியிலிருந்து புறக்கணிக்கப்பட்டார். ஆனால் அதற்கு பதிலாக இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற கவுண்டி அணியில் இடம்பிடித்து அங்கேயும் பேட்டிங், பவுலிங் என இரு பிரிவுகளிலும் தனது திறமையை வெளிப்படுத்தினார்.
இருப்பினும் இந்திய அணியில் இடம்பிடிப்பதற்காக அவர் பந்துவீச்சில் கையாண்ட சில யுக்திகள் ரசிகர்களின் மனதில் சலசலப்பை ஏற்படுத்தியது. அதில் மிக முக்கியமானது டி.என்.பி.எல். தொடரில் அவரின் பந்துவீச்சு மிகுந்த விமர்சனத்துக்கு உள்ளானது.
பின் மீண்டும் இந்திய டெஸ்ட் அணியில் கோலொச்சிய அஸ்வின், டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசைப் பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறி அசத்தியதுடன், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய பந்துவீச்சாளர் எனும் சாதனையையும் படைத்தார்.
இருப்பினும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் ஒரு போட்டியில் கூட இவரை களமிறக்காதது பெரும் விமர்சனங்களுக்குள்ளானது. ஏனெனில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இவர் சதமடித்து இந்திய அணிக்கு வெற்றியைத் தேடித்தந்திருந்தார்.
மேலும் தொடர்ந்து அபாரமான ஆட்டங்களை வெளிப்படுத்தி வந்த அஸ்வினை, இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பேட்டிங்கை காரணம் காட்டி ஓரங்கட்டியது பெரும் விவாதமாகவும் மாறியது. ஆனால் நடப்பாண்டு டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் 4 ஆண்டுகளுக்கு பிறகு இடம்பிடித்தது, அந்த விவாதங்களை மாற்றியது.
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்
79 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ஐந்து சதங்கள் உள்பட 2,685 ரன்கள் விளாசியுள்ளார். 30 முறை தலா ஐந்து விக்கெட்டுகளுடன் 413 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்
ஒருநாள் போட்டிகளைப் பொறுத்தவரையில் அஸ்வின் இந்திய அணிக்காக 111 போட்டிகளில் 675 ரன்கள் அடித்துள்ளார். 150 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார்.
சர்வதேச டி20 கிரிக்கெட்
சர்வதேச டி20 போட்டிகளைப் பொறுத்தவரையில் இவர் இந்திய அணிக்காக 46 போட்டிகளில் விளையாடி 123 ரன்கள் அடித்துள்ளார். 52 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
இன்று தனது 35ஆவது பிறந்த நாளை கொண்டாடிவரும் அஸ்வினுக்கு #HappyBirthdayAshwin...
Win Big, Make Your Cricket Tales Now