ஐபிஎல் 2021: தொடர் ஒத்திவைப்பால் பிசிசிஐ ஏற்படும் இழப்புகள்!
கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பாதியிலேயே ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்படுவதால் பிசிசிஐக்கு 2ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கரோனா தொற்று பரவல் ஐபிஎல் தொடரை திட்டமிட்டபடி நடத்துவதில் சிக்கலை உருவாக்கியது. அதனால் எஞ்சியுள்ள லீக் போட்டிகள் அனைத்தையும் மும்பை மைதானத்திற்கு மாற்ற பரிசீலிக்கப்பட்டு வந்த நிலையில், ஹைதராபாத் வீரர் சஹாவுக்கும், டெல்லி வீரர் அமித் மிஸ்ராவுக்கு கரோனா தொற்று உறுதியானது.
பயோ பபுளில் இருந்த வீரர்களுக்கு அடுத்தடுத்து தொற்று உறுதியானதால் ஐபிஎல் தொடரை தொடர்ந்து நடத்துவதில் சிக்கல் எழுந்தது. தொடர் முழுவதும் நடைபெறுமா? என்ற சந்தேகம் எழுந்த சூழலில் ஐபிஎல் நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.
Trending
அதன்படி நடப்பாண்டு ஐபிஎல் சீசனை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். தேதி எதுவும் குறிப்பிடப்படாமல் ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், லீக் போட்டிகள் அனைத்தும் நடைபெறுமா? அல்லது வேறு ஏதேனும் திட்டத்தை பிசிசிஐ கையாளுமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
கரோனா காரணமாக பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டுள்ள ஐபிஎல் தொடரால் பிசிசிஐ-க்கு 2 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிலும் குறிப்பாக ஒளிபரப்பு, ஸ்பான்சர்ஷிப் உள்ளிட்ட முதலியவற்றில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து பிசிசிஐ அலுவலர் ஒருவர் கூறுகையில்,“பாதியிலேயே தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் 2000 முதல் 2500 கோடி ரூபாய் வரை பிசிசிஐக்கு இழப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. சரியாக சொல்ல வேண்டுமென்றால் 2200 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும்” என தெரிவித்துள்ளார்.
52 நாட்களில் 60 போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில் நடப்பு ஐபிஎல் சீசன் வெறும் 24 நாட்கள் மட்டுமே நடத்தப்பட்டுள்ளது. அதில் 29 போட்டிகள் தான் நடந்து முடிந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
உதாரணமாக ஸ்டார் நெட்வொர்க்குடன் மேற்கொள்ளப்பட்டுள்ள 5 ஆண்டு ஒளிபரப்பு ஒப்பந்தத்தின் மூலம் 16 ஆயிரத்து 347 கோடி ரூபாய் பிசிசிஐக்கு வருமானமாக கிடைக்கும். ஆண்டுக்கு 3 ஆயிரத்து 269 கோடி ரூபாய். ஒரு சீசனில் 60 போட்டிகளும் நடந்தால் ஒரு போட்டிக்கு 54.5 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும். ஆனால் தற்போது அதில் இழப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் தற்போது வரை நடத்தப்பட்டுள்ள 29 போட்டிகள் மூலம் ஆயிரத்து 580 கோடி ரூபாய் மட்டுமே கிடைக்கும். மீதமுள்ள போட்டிகள் நடத்தப்படாமல் போனால் ஆயிரத்து 690 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும்.
இதே போல டைட்டில் ஸ்பான்சர் தொடங்கி அனைத்திலும் இழப்பு தான். மறுபக்கம் வீரர்களின் ஊதியத்திலும் சிக்கல்கள் ஏற்படலாம் என தெரிகிறது. வீரர்கள் தாமாக தொடரிலிருந்து விலகினால் மட்டுமே அவர்களது பங்களிப்புக்கு ஏற்ற படி ஊதியம் கொடுக்கப்படும். அதனால் ஒவ்வொரு அணிகளும் தங்கள் வீரர்களுக்கு ஊதியத்தில் 50 சதவிகிதம் கொடுக்க வேண்டியுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now