
இந்தியாவில் இன்னும் சில தினங்களில் தொடங்க இருக்கும் ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் மீது கிரிக்கெட் ரசிகர்களின் முழு கவனமும் திரும்பியுள்ளது. அதிலும் குறிப்பாக இந்தாண்டு உலகக்கோப்பை தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வென்று கோப்பையைக் கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அதில் சொந்த மண்ணில் கோப்பையை வெல்லும் அணியாகவும் கருதப்படும் இந்தியாவுக்கு சவாலை கொடுக்கும் முதன்மையான வெளிநாட்டு அணி என்றால் அது ஆஸ்திரேலியாவாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் கடந்த 1987 உலகக் கோப்பையை முதல் முறையாக ஆலன் பார்டர் தலைமையில் இந்திய மண்ணில் முதல் முறையாக ஆஸ்திரேலியா வென்றது.
அதன் பின் 1999, 2003, 2007, 2015 ஆகிய வருடங்களில் ஸ்டீவ் வாக், ரிக்கி பாண்டிங், மைக்கேல் கிளார்க் ஆகியோரது தலைமையில் மொத்தம் 5 கோப்பைகளை வென்று உலக கிரிக்கெட்டின் முடிசூடா அரசனாக திகழ்ந்து வருகிறது. மேலும் தோல்வியின் விளிம்புக்கு சென்றாலும் மனம் தளராமல் போராடி வெற்றி காணும் குணத்தை இயற்கையாகவே கொண்ட ஆஸ்திரேலியர்களுக்கு ஐசிசி தொடர்களில் எப்படி அசத்தும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.