
இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கோப்பையை வெல்வதற்கு போட்டியிடும் டாப் 10 கிரிக்கெட் அணிகளில் நெதர்லாந்து மிகவும் கத்துக்குட்டியாகவே பார்க்கப்படுகிறது. சொல்லப்போனால் கடந்த 1996ஆம் ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்ற உலகக் கோப்பையில் முதல் முறையாக விளையாடிய அந்த அணி அதன் பின் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற 2003 உலக கோப்பையில் விளையாடும் வாய்ப்பை பெற்றது.
அதை தொடர்ந்து உறுப்பு நாடுகளுக்கு மத்தியில் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தியதால் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெற்ற 2007 உலகக் கோப்பையிலும் விளையாடும் வாய்ப்பை பெற்ற அந்த அணி கடைசியாக இந்திய மண்ணில் நடைபெற்ற 2011 உலகக்கோப்பையில் மட்டுமே விளையாடியிருந்தது. ஏனெனில் அதைத்தொடர்ந்து குவாலிஃபையர் தொடர்களில் தோல்வியை சந்தித்த அந்த அணி 2015, 2019 உலகக் கோப்பைகளில் விளையாடுவதற்கு தகுதி பெறவில்லை.
இருப்பினும் இம்முறை கடந்த ஜூன் மாதம் ஜிம்பாப்வே மண்ணில் நடைபெற்ற குவாலிஃபயர் தொடரில் ஆரம்பத்தில் தடுமாறிய அந்த அணி முக்கிய நேரத்தில் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி வெஸ்ட் இண்டீஸ், ஸ்காட்லாந்து போன்ற அணிகளை பின்னுக்கு தள்ளி ரன் ரேட் உதவியுடன் இறுதிப்போட்டிக்கு வந்தது. அதில் இலங்கையிடம் தோல்வியை சந்தித்தாலும் 12 வருடங்கள் கழித்து மீண்டும் இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பைக்கு நெதர்லாந்து தகுதி பெற்றுள்ளது.