
ஐசிசி 2023 உலகக் கோப்பை தொடரை சொந்த மண்ணில் இந்திய அணி வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் அதற்கு நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற அணிகள் சவாலை கொடுக்கும் என நம்பப்படுகிறது. அந்த வரிசையில் இந்தியா மட்டுமின்றி உலகின் அனைத்து கிரிக்கெட் அணிகளுக்கும் சவாலை கொடுக்கும் ஒரு அணியாக தென்னாப்பிரிக்கா திகழ்கிறது என்றே சொல்லலாம்.
இந்நிலையில், ஜக் காலிஸ், எபி டி வில்லியர்ஸ், டேல் ஸ்டெய்ன் போன்ற கிரிக்கெட் வரலாற்றின் தலைசிறந்த பல வீரர்கள் தென் ஆப்ரிக்கா அணியில் இருந்து கிரிக்கெட் உலகிற்கு கிடைத்திருந்தாலும், தென் ஆப்ரிக்கா அணியால் இதுவரை ஒரு முறை கூட உலகக்கோப்பையை வெல்ல முடியவில்லை. பேட்டிங், பந்துவீச்சு என அனைத்திலும் தென் ஆப்ரிக்கா அணி வலுவான அணியாக இருந்தாலும், உலகக்கோப்பை போன்ற பெரிய தொடர்களில் சொதப்பி கோப்பையை வெல்லும் வாய்ப்பை தொடர்ந்து இழந்து வருவதால் அந்த அணியை ரசிகர்கள் “சோக்கர்ஸ்” என கிண்டல் செய்வது வழக்கம்.
எடுத்துக்காட்டாக 1992 உலகக் கோப்பையில் முக்கிய போட்டியில் மழை வந்து 1 பந்துக்கு 22 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற அதிர்ஷ்டமற்ற நிலையால் தென் ஆப்பிரிக்கா வெற்றியைக் கோட்டை விட்டது. அதே போல 1999 உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டியில் ஸ்டீவ் வாக் கேட்ச்சை ஹெர்சல் கிப்ஸ் விட்டதும், ஆலன் டொனால்ட் சரியாக சிங்கிள் எடுக்காமல் வீணடித்ததும் எதிரணிக்கு தாரை வார்த்தது. இப்படி ஓவ்வொரு முறையும் அதிர்ஷ்டமில்லாமல் கோப்பையை தவறவிட்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி இம்முறையாவது கோப்பையை கைகளில் ஏந்துமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.