
கிரிக்கெட்டில் அறிமுகமாகும்போது ஒரு வீரர் எந்த அளவிற்கு ரசிகர்களுக்கும், அணி நிர்வாகத்தினருக்கும் நம்பிக்கையளிக்கிறாரோ அதே நம்பிக்கையில் அவருக்கு அணி நிர்வாகம் தொடர்ந்து வாய்ப்பளிக்கும். ஆனால் இந்த வீரருக்கு ரசிகர்களை ஈர்க்கும் முகமோ, அதிரடியான ஆட்டமோ தொடக்கக் காலத்தில் இல்லை. ஆனால் அணியில் இருக்கும் ஒவ்வொரு வீரருக்கும் இவர் மீது பெரும் நம்பிக்கை இருந்தது. எதிர்காலத்தில் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கப் போகிறார் என்று...
கடந்த 2007 டி20 உலகக்கோப்பை, ஆஸ்திரேலிய முத்தரப்பு ஒருநாள் தொடர் என சில போட்டிகளில் நன்றாக ஆடியிருந்தாலும் ரசிகர்கள் இவரை கண்டுகொள்ளவே இல்லை. அப்போது தான் சுரேஷ் ரெய்னா தலைமையில் இளம் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸிற்கு பயணம் மேற்கொண்டது. விராட் கோலி இந்திய ரசிகர்களை தன்வசம் ஈர்த்துக்கொண்டிருந்த சமயம்.
ஆனால் ரோஹித் ஷர்மா என்ற இளம் வீரரை ரசிகர்கள் அந்தத் தொடரில் தான் அடையாளம் கண்டுகொண்டார்கள். விளையாடிய 5 போட்டிகளில் மூன்று அரைசதம். அதிலும் மூன்றாவது போட்டியில் ஹர்பஜன் சிங், பிரவீன் குமாருடன் இணைந்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்று தன் திறமையை அனைவரும் அறிய வைத்தார். இதைப்பற்றி முன்னாள் இந்திய பயிற்சியாளர் டன்கன் ப்ளெட்சர், ''ரோஹித்தின் இந்த இன்னிங்ஸ் அற்புதமானது. 96 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்த பின், ஆட்டமிழக்காமல் டெய்லண்டர்களுடன் ரோஹித் ஆடிய ஆட்டம் கிரிக்கெட்டராக முதிர்ச்சியை வெளிப்படுத்தியத் தருணம்'' என்றார்.