
டெஸ்ட் கிரிக்கெட்டில் இவரது பெயரை கேட்டாலே பேட்ஸ்மேன்கள் மனதில் அச்சம் ஏற்பட்டதென்றால் அந்த வீரரின் பெயர் தென் ஆப்பிரிக்கா வேகப்புயல் டேல் ஸ்டெயின். கடந்த 30 வருடங்களில் மிகச்சிறந்த டெஸ்ட் அணியை யாராவது தேர்வு செய்தால் அதில் ஸ்டெயின் பெயர் நிச்சயம் இடம்பெறும். ஆடிய அனைத்து போட்டிகளிலும் இவர் தனது தடத்தைப் பதிக்காமல் சென்றதில்லை.
பந்துவீசுவதற்கு ஸ்டெயின் ஓடிவரும் 14 அடிகளில், முதல் நான்கு அடிகளில் இரு கைகளிலும் பந்து இருக்கும், பின்னர் அடுத்த நான்கு அடிகளில் வலது கைகளுக்குள் பந்து செல்லும், கடைசி ஆறு அடிகளில் கைகளில் உள்ள பந்து தோளை தொட்டு வீசப்படும்போது பேட்ஸ்மேன்களின் பேட்டை தாண்டி சென்றுவிடும். 2004ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா அணியில் நிடினி, பொல்லாக் என ஜாம்பவான்கள் நிறைந்திருந்த நேரம். அணிக்குள் வந்த சில போட்டிகளிலேயே ஸ்டெயின் மிகப்பெரிய வீரராக மாறிவிடவில்லை. ஏன், அணியிலிருந்து சில தொடர்களில் கழற்றியும் விடப்பட்டார்.
கிட்டதட்ட மூன்று ஆண்டுகளாக அணிக்குள் நிரந்தர இடமும் கிடைக்கவில்லை. அப்போதுதான் தென்னாப்பிரிக்காவின் ஆட்டம் உச்சத்திற்கும் சென்றது. ஜாம்பவான் வீரர்கள் ஒவ்வொருவராக வெளியேற, வாய்ப்பு ஸ்டெயினுக்கு வந்தது. சரியான நேரத்தில் கிடைக்கும் வாய்ப்பை ஒருவர் தவறவிட்டால், வாழ்வே மாறிவிடும். அதே வாய்ப்பைப் பயன்படுத்தினால்...!