
கடந்த 2019, ஜூலை 11ஆம் தேதி இங்கிலாந்தின் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டி. மழையின் காரணமாக இரண்டாவது நாளாக தொடர்ந்த ஒருநாள் போட்டி. இந்திய அணியின் வெற்றிக்கு 12 பந்துகளில் 31 ரன்கள் எடுக்க வேண்டும். தோனி களத்தில் இருக்கிறார். அடுத்த ஓவரை வீச நியூசிலாந்து அணியின் ஃபெர்குசன் அழைக்கப்பட்டார். முதல் பந்தில் தோனியின் ஆஸ்தான ட்ரேட்மார்க் ஷாட்டான பேக்வார்டு பாய்ண்ட் திசையில் சிக்சர். 11 பந்துகளில் 25 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலை வந்தது. அடுத்த பந்து யார்க்கர். ரன்கள் ஏதும் இல்லை. அந்த ஓவரின் மூன்றாவது பந்து, ஸ்கொயரில் தட்டிவிட்டு தோனியின் கால்கள் வேகம் எடுக்கின்றன. முதல் ரன்னை முடித்துவிட்டு, இரண்டாவது ரன்னுக்காக ஓடி வரும் போது, கப்தில் சரியாக ஸ்டெம்புகளில் டைரக்ட் ஹிட் அடிக்கிறார்.
பொதுவாக எவ்வித சலனமும் இல்லாமல் தோனியின் முகம் காணப்படும். ஆனால் அன்று, மூன்றாவது நடுவரின் தீர்ப்பைப் பார்த்ததும் தலை குனிந்தவாறு களத்தில் இருந்து சோகத்துடன் வெளியேறுகிறார். இந்தியாவுக்கே அன்று ஹார்ட் அட்டாக் தான். உலகக்கோப்பைக் கனவு பறிபோனது. கமெண்ட்ரியில் ”இது நிஜம் தானா...தோனி கடைசியாக மைதானத்தை விட்டு வெளியேறுகிறாரா?” எனக் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. மைதானத்தில் இருந்த அனைவரும் தோனிக்காக எழுந்து நின்று கரகோஷம் எழுப்புகின்றனர்.
'கடினமான காலங்களில் கூட, முக்கியமானது என்னவென்றால், உங்கள் முகத்தில் புன்னகையுடன் எல்லாவற்றையும் கடந்து செல்வதுதான்' இது தோனி கூறிய வார்த்தைகள். ஆனால் அந்தப் போட்டியின் தோல்வியிலிருந்து இதுவரை யாராலும் வெளிவர முடியவில்லை. ஏன் தோனிக்கே சில மாதங்கள் பிடித்தன.