
ஐபிஎல் திருவிழாவின் 17ஆவது சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் தற்போதிலிருந்தே தொடங்கிவிட்டன. மேலும் இத்தொடர் தொடங்குவதற்கு இன்னும் சில நாள்கள் மட்டுமே உள்ள நிலையில், அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வரிசையில் ஐபிஎல் தொடரில் கோப்பையை வென்றுள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இரண்டாவது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்புடன் இத்தொடரை எதிர்கொள்ளவுள்ளது. அந்த வகையில் பாட் கம்மின்ஸ் தலைமையில் நடப்பு ஐபிஎல் சீசனை எதிர்கொள்ளவுள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பலம், பலவீனம், அணி விவரம் மற்றும் போட்டி அட்டவணையை இப்பதிவில் விரிவாக பார்ப்போம்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
கடந்த 2008ஆம் ஆண்டு இந்தியாவில் தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடரில் டெக்கன் சார்ஜர்ஸ் அணியாக அறிப்பட்ட ஹைதராபாத் அணியானது 2013ஆம் ஆண்டில் சன் குழும உரிமையைப் பெற்றபின் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் என்ற புதிய அணியாக உருவெடுத்தது. அதன்படி சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணி ஐபிஎல் தொடரில் இதுவரை ஒரு முறை சாம்பியன் பட்டத்தையும், ஒருமுறை இரண்டாம் இடத்தையும் பிடித்து அசத்தியுள்ளது. அதுதவிர 6 முறை பிளேஆஃப் சுற்றுக்கும் முன்னேறியும் உள்ளது. ஆனாலும் டேவிட் வார்னர், கேன் வில்லியம்சன் போன்ற வீரர்களை அந்த அணி நிர்வாகம் வெளியேற்றிய பிறகு கடந்த இரு சீசன்களாக புள்ளிப்பட்டியளின் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டு மோசமான முடிவுகளைப் பெற்றது.