
கடந்த ஆண்டு ''From 1929hrs consider me as Retired'' என்ற இந்த இன்ஸ்டாகிராம் பதிவிற்கு பின் இந்திய கிரிக்கெட்டில் முடிசூடா மன்னனாக பயணித்தவரின் சகாப்தம் முடிவுக்கு வந்ததாக பத்திரிகைகள் செய்திகள் வெளியிட தொடங்கின. கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை 10ஆம் தேதி அந்த வீரர் ஆட்டமிழந்தபோது, பலரின் மூளையிலும் எழுந்த கேள்விக்கு அன்றைய தினம் பதில் கிடைத்தது.
ஆம், இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் தோனி தனது 39ஆவது வயதில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்துவித்தது தான் அது. அவரது ரசிகர்கள் ட்விட்டரிலும், ஃபேஸ்புக்கிலும், வாட்ஸ்அப்பிலும் சோக கீதங்கள் பாடத் தொடங்கின. தனது ஆட்டத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் ஆச்சரியத்தை விதைத்த தோனியின் ஓய்வு அறிவிப்பும் ஆச்சரியமாகவே இருந்தது. அவரின் பயணம் குறித்த விமர்சனங்கள், புகழ் மாலைகள், குற்றச்சாட்டுகள் என அனைத்தும் தற்போது ஆய்வு செய்யப்பட்டுவருகிறது.
சச்சினுக்கு பிறகு இந்திய கிரிக்கெட்டின் முகமாக அறியப்பட்டவர், கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக இந்திய ரசிகர்களின் ப்ரஷரை தோளில் சுமந்தவர். ஜார்க்கண்ட்டின் ராஞ்சியில் தொடங்கிய இவரது பயணம், 16 ஆண்டுகள் கழித்து முடிவுக்கு வந்துவிட்டது. இதுதான் பெரும்பாலான ஜாம்பவான்களுக்கு ஏற்படும் நிலை. பாண்டிங், கங்குலி, கபில் தேவ், மியாந்தத், ஏன் சச்சினுக்குகூட இந்த நிலை ஏற்பட்டது. ஆனால், இதனை நன்கு உணர்ந்த வீரர் தோனி மட்டும்தான்.