
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிகச் சிறந்த கேப்டன்களில் ஒருவர் ‘தாதா’ என்றழைக்கப்படும் சவுரவ் கங்குலி. தன்னுடைய அதிரடி ஆட்டத்தாலும் ஆக்ரோஷமான செயல்பாடுகளாலும் பலரையும் ஈர்த்த, இவர் 1992ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான சர்வதேச ஒருநாள் போட்டியில் முதல் முறையாக களமிறங்கினார்.
ஆனால் அந்தப் போட்டியில் இவர் சிறப்பாக செயல்படவில்லை. மேலும் அந்தத் தொடரில் மற்ற வீரர்களுக்கு தண்ணீர் உள்ளிட்டவற்றை எடுத்து செல்ல மறுத்தார் என்ற புகாரும் எழுந்தது.
ஒரு கிரிக்கெட் வீரரின் தொடக்க காலத்திலேயே இவ்வாறு சர்ச்சை மற்றும் விமர்சனங்கள் எழுந்தது அவருக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது. அதன் பின்னர் மீண்டும் ரஞ்சி கோப்பை போட்டிகளில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். இதன் காரணமாக 1996ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் இவர் அணிக்கு தேர்வானார். அங்கு சென்ற இந்திய அணியின் பயிற்சி போட்டியில் களமிறங்கிய கங்குலி முதல் இன்னிங்ஸில் ரன் ஏதுமின்றியும், இரண்டாவது இன்னிங்ஸில் 70 ரன்களையும் அடித்தார். எனினும் அவருக்கு முதல் போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை.