
இந்தியாவில் தற்போதுள்ள இளம் தலைமுறை கிரிக்கெட் ரசிகர்களுக்கு உலகக் கோப்பை என்றாலே 2011 இல் "லாங் ஆன்" திசையில் தோனி அடித்த சிக்ஸரும் நினைவுக்கு வரும். ஆனால் இதே நாளில் 38 ஆண்டுகளுக்கு முன்பு கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி, அப்போதைய கிரிக்கெட் ஜாம்பவான்களான வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி 1983 ஆம் ஆண்டு முதல் முறையாக உலகக் கோப்பையை கையில் ஏந்தியது.
அப்போது நாடே இந்த வெற்றியை பெரும் கொண்டாட்டமாவே பார்த்தது. கோப்பையை வென்ற இந்திய அணிக்கு அப்போது வைக்கப்பட்ட செல்லப் பெயர் "கபில்ஸ் டெவில்ஸ்".
கிரிக்கெட்டை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் வழிமுறையாக ஒருநாள் உலகக்கோப்பை தொடரை ஐசிசி அறிமுகப்படுத்தியது. அதன்படி 1975ஆம் ஆண்டு மற்றும் 1979 ஆம் ஆண்டு என முதல் இரண்டு உலகக் கோப்பை போட்டிகளில் அபாரமாக ஆடி சாம்பியன் பட்டம் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கிரிக்கெட்டில் கோலொச்சியிருந்தது.