Advertisement
Advertisement
Advertisement

‘டெஸ்ட் கிரிக்கெட்டின் சகாப்தம்’ #RahulDravid

இந்திய கிரிக்கெட்டின் பெருஞ்சுவர் என்றழைக்கப்படும் ஜாம்பவான், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இன்று தனது 49ஆவது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார்.

Bharathi Kannan
By Bharathi Kannan January 11, 2022 • 13:53 PM
Rahul Dravid turns 49, here's a look at The Wall's finest knocks in Tests
Rahul Dravid turns 49, here's a look at The Wall's finest knocks in Tests (Image Source: Google)
Advertisement

கிரிக்கெட்... இந்தியாவில் பிறந்த இளைஞர்களில் பெரும்பாலானோரின் சிறுவயது கனவு. கிரிக்கெட் வீரராக இருக்கவேண்டும் என்பது தான். இந்தியாவில் கிரிக்கெட்டை ஒரு மதம் என போற்றும் கூட்டம் உள்ளது.

சர்வதேச கிரிக்கெட் ரசிகர்களைப் பொறுத்தவரை டெஸ்ட் கிரிக்கெட் ஆடினால் மட்டுமே, அவர் முழுமையான கிரிக்கெட் வீரர் என அங்கீகரிக்கப்படுவார். ஐந்து நாள்கள் ஆடப்படும் டெஸ்ட் கிரிக்கெட் என்னும் கலையில் மிகவும் கடினமான விஷயம் என்னவென்றால், மூன்றாவதாகக் களமிறங்குவது தான். 

Trending


ஏனென்றால் தொடக்க வீரர்கள் களமிறங்கும்போதே, மூன்றாவதாக களமிறங்கும் வீரரும் போட்டிக்கு தயாராக வேண்டும். மூன்றாவதாக களமிறங்கும் வீரர் தான் பின்வரும் வீரர்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த களம் அமைத்துகொடுக்க வேண்டும்.

அப்படி மூன்றாவதாக களமிறங்கும் தலைவலியை 16 ஆண்டுகள் சிறப்பாக செய்தவர் ராகுல் டிராவிட். டெஸ்ட் கிரிக்கெட் என்னும் கலையின் பிகாசோ. பிகாசோவின் ஓவியங்கள் ஒவ்வொன்றையும் முதல் தடவை பார்த்தால், மிகவும் எளிதாகத் தெரியும். ஆனால் அந்த ஓவியங்களை ஒவ்வொரு முறைப் பார்க்கும்போதும் ஒரு உணர்வு கிடைக்கும். அதுபோல் தான் டிராவிட்டின் கிரிக்கெட்டும்.

இந்த சுவரின் தடுப்பாட்டத்தை எந்த பீரங்கியாலும் தகர்க்க முடியாது. பந்துவீச்சாளர் பவுண்டரி லைனிலிருந்து வந்தாலும் சரி, பக்கத்தில் இருந்து வந்தாலும் சரி டிராவிட்டின் ஸ்ட்ரைக் ரேட் 10ஐ தாண்டாது. பந்துவீச்சாளர்களிடம் சிறிதும் கருணை காட்டமாட்டார்.

டெஸ்ட் கிரிக்கெட் என்னும் கலையில் எப்படி பேட்டிங் செய்யவேண்டும் என எழுதியிருக்கிறார்களோ, அதனை அவ்வாறே அப்படியே செய்தவர் டிராவிட். டெஸ்ட் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை, பல பேட்ஸ்மேன்கள் பந்துவீச்சாளர் வீசும் பந்துகளை எதிர்கொண்டு ரன்கள் எடுப்பார்கள், சில பேட்ஸ்மேன்கள் மட்டுமே தங்களுக்கு ஏற்றவாறு பந்துவீச்சாளர்களை வீச வைத்து ரன்கள் எடுப்பார்கள். அதில் டிராவிட் இரண்டாவது ரகம்.

எந்த பந்துவீச்சாளர் எப்படி வீசினாலும் சரி, அவர்களை முதலில் சலிப்படைய வைக்க வேண்டும். இதுதான் டெஸ்ட் கிரிக்கெட்டில் எழுதப்படாத விதி. அந்த விதியை வாழ்நாள் முழுவதும் தனது ஆட்டத்தில் பின்பற்றியவர்.

டிராவிட் தனது பள்ளி நாட்களில் ஹாக்கியை தான் முதன்மை விளையாட்டாக ஆடினார். அதையடுத்து தான் முழு கவனமும் கிரிக்கெட்டின் மீது சென்றது. ஹாக்கியிலும், தனது நிலை டிஃபென்சிவ் வீரர். அதாவது எதிரணியின் அட்டாக்கிங் வீரர்கள் கோல் போடுவதற்கு பந்தை கொண்டு வரும்போது, அவர்களிடமிருந்து பந்தைக் கைப்பற்றி தனது அணி வீரர்களுக்கு பாஸ் செய்யவேண்டும். அதே செயலை தான் டிராவிட் இந்திய கிரிக்கெட் அணிக்கும் செய்தார்.

1986ஆம் ஆண்டு முதல் 2000ஆம் ஆண்டுவரை இந்திய அணி வெளிநாட்டிற்கு பயணம் செய்து ஆடிய 48 டெஸ்ட் போட்டிகளில் வெற்றிபெற்றது ஒரே ஒரு போட்டியில் மட்டும் தான். அதையடுத்து இந்திய அணி கங்குலி தலைமையில் பயணம் செய்யத் தொடங்கியதும், மாற்றம் காணத்தொடங்கியது.

1996ஆம் ஆண்டு சஞ்சய் மஞ்ரேக்கர் காயம் காரணமாக லார்ட்ஸ் டெஸ்ட் போட்டிலிருந்து விலக, அதற்கு பதிலாக களமிறங்கினார் டிராவிட். அந்தப் போட்டியில் கங்குலி சதம் விளாச, ஏழாவது வீரராக டிராவிட் களமிறங்கி தன் பங்கிற்கு 267 பந்துகளை எதிர்த்து 95 ரன்கள் எடுத்தார்.

அதையடுத்து டிராவிட்டின் இடம் இந்திய அணிக்குள் நிரந்தரமானது. தொடர்ந்து 1999ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரரும் டிராவிட் தான். 2002 - 2006, இந்த நான்கு ஆண்டுகள் தான் டிராவிட் தன் உட்சபட்ச ஃபார்மில் இருந்த சமயம். அப்போது அவரின் ஆவரேஜ் இங்கிலாந்தில் 100.3, ஆஸ்திரேலியாவில் 123.8, பாகிஸ்தானில் 80.33, வெஸ்ட் இண்டீஸில் 82.66.

சரியாக 2003ஆம் ஆண்டு இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு பயணம் செய்தது. 1999ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொண்டபோது 3-0 என இந்திய அணித் தொடரை இழந்தது. இந்த முறை அதனை மாற்றவேண்டும் என்பதோடு, ஆஸ்திரேலிய அணியின் தொடர் வெற்றிகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்ற சூழல்.

அப்போது முதல்போட்டி மழையால் முடிவில்லாமல் செல்ல, இரண்டாவது போட்டி அடிலெய்டில். அடிலெய்ட் என்று அழைக்காமல் அதனை ஆஸ்திரேலியாவின் கோட்டை என்றே சொல்லலாம். ஆனால் அந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் கோட்டையை தனதாக்கிக் கொண்டார் டிராவிட். ரிக்கி பாண்டிங்கின் இரட்டை சதத்திற்கு பதிலளிக்கும் விதமாக டிராவிட் இரட்டை சதம் விளாசியதோடு, இரண்டாவது இன்னிங்ஸில் 72 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இந்திய அணியின் வெற்றியைப் பதிவு செய்தார். இன்றும் டிராவிட் ரசிகர்களுக்கு அந்த போட்டிதான் ஃபேவரைட்.

அதையடுத்து சுட்டெரிக்கும் பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் உயிரைக் கொடுத்து வேர்வை கொட்டக்கொட்ட ஆடி எடுத்த 270 ரன்கள், வெஸ்ட் இண்டீஸின் ஜமைக்கா மைதானத்தில் ஆடப்பட்ட இன்னிங்ஸ்கள் எல்லாம் டிராவிட்டின் பெருமைகளை உலகறிய செய்தது.

மூன்றாவது வீரராக களமிறங்கி சர்வதேச கிரிக்கெட்டில் பத்தாயிரம் ரன்களைக் கடந்த முதல் வீரர் டிராவிட் தான். இந்திய அணி வெளிநாடுகளில் பெற்ற வெற்றிகள் அனைத்திலும் டிராவிட்டிற்கு பெரும் பங்குண்டு. இந்திய அணி வெளிநாட்டு தொடர்களில் பெற்ற வெற்றிகளில் டிராவிட்டின் ஆவரேஜ் 65.70, வெளிநாடுகளில் இந்திய அணி டிரா செய்த போட்டிகளில் டிராவிட்டின் ஆவரேஜ் 75.19. இவையனைத்தும் சொல்லுவது என்னவென்றால், டிராவிட் இந்திய அணியில் ஆடினால் இந்தியாவுக்கு நிச்சயம் வெற்றிதான்.

ஆனால் கிரேக் சேப்பல் பயிற்சியாளரான பிறகு சொந்த நாட்டு ரசிகர்களாலேயே டிராவிட் ஒதுக்கப்பட்டார். இந்திய நிர்வாகமும், அப்போதைய கேப்டனும் டிராவிட் இனி குறுகிய காலப் போட்டிகளுக்கு தேவையில்லை என நினைக்க, தானாக ஒதுங்கினார். 2011ஆம் ஆண்டு இந்திய அணி உலகக்கோப்பை வென்றபின், டிராவிட் இனி குறுகிய கால போட்டிகளில் பங்கேற்கவே முடியாது என எழுதினார்கள்.

Form is Temporary But Class is Permanent என்பார்கள். ஆனால் டிராவிட்டிற்கு, Form is Permanent, Class is also Permanent தான். உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி என்ற மரியாதை சிறிதும் இல்லாமல் இங்கிலாந்திற்கு சென்று ஆடிய நான்கு டெஸ்ட் போட்டிகளிலும் பெரும் தோல்வி. அதில் டிராவிட் மட்டுமே இந்திய அணியில் இருந்து சதம் விளாசிய ஒரே வீரர். ஓவல் போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கி 146 ரன்கள் எடுக்க, எதிரில் இருந்த அனைத்து இந்திய வீரர்களும் பெவிலியன் திரும்பியபடியே இருந்தனர்.

அந்த இன்னிங்ஸ் முடிந்து இந்தியாவுக்கு இங்கிலாந்து அணி ஃபாலோ - ஆன் கொடுக்க, மொத்த கிரிக்கெட் உலகமும் ஆனந்த கண்ணீர் வடித்த நொடி அது. ஆம், இந்திய அணி ட்ரெஸிங் ரூமில் இருந்து டிராவிட் மீண்டும் களமிறங்கினார்.

அதையடுத்து இந்திய நிர்வாகம் எடுத்த முடிவு தான் டிராவிட்டுக்கே ஆச்சர்யம். எந்த இந்திய அணி நிர்வாகமும், கேப்டனும் டிராவிட்டை அணியின் வளர்ச்சிக்காக ஒதுக்கினார்களோ, அவர்களே இந்திய அணியின் நிலை சரியில்லை. நீங்கள் மீண்டும் குறுகிய காலப் போட்டிகளுக்கு திரும்பவேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.

அவர்களின் கோரிக்கைக்கு ஏற்ப டி20 தொடரிலும், ஒருநாள் போட்டிகளிலும் ஆடிவிட்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வைபெற்றார். டிராவிட் இந்திய அணியின் செயல்பாடுகளால் ஓய்வை அறிவித்தார் என பலர் நினைத்தனர். ஆனால் டிராவிட் அதற்காக ஓய்வை அறிவிக்கவில்லை.

டிராவிட்டிற்கு 2012ஐ கடந்து பார்த்தால், 2008 ஆம் ஆண்டு தான் பேட்டிங்கில் அதிக விமர்சனமும், தோல்விகளும். அந்த வருடத்தில் டிராவிட்டின் ஆவரேஜ் 31க்கும் கீழ்தான். ஆனால் ரன்கள் எடுக்க முடியாமல் தவித்தபோதும், ஆடிய 28 இன்னிங்ஸ்களில் நான்கு முறை மட்டுமே போல்டாகினார். அதுவும் டிராவிட்டை போல்ட் செய்தவர்கள் யார் என்றால், ஸ்டெயின்(இருமுறை), லீ, இரேம் ஸ்வான் மட்டுமே. உலகின் மிகச்சிறந்த பந்துவீச்சாளர்களாலேயே டிராவிட் வீழ்த்தப்பட்டிருந்தார்.

ஆனால் 2012இல் ஆடிய 6 இன்னிங்ஸில் நான்கு முறை போல்டானார். அதுவும் ஹாரிஸ், சிடில், ஹில்பென்ஹாஸ் ஆகியோரால் வீழ்த்தப்பட்டது. இவர்கள் அனைவரும் பெரிய பந்துவீச்சாளர்கள் இல்லை. தனது தடுப்பாட்டத்தில் ஓட்டை விழுந்ததை தெரிந்துகொண்டதும், பெரிய ஆரவாரம் இல்லாமல் அமைதியாக ஓய்வுக்கு சென்றார்.

ஆனால் அதையடுத்து தான் டிராவிட்டின் தேவை இந்திய அணிக்கு அதிகமாக ஏற்பட்டது. அதனால் உடனடியாக இந்திய அணியின் பயிற்சியாளராக வர இயலுமா என டிராவிட்டை அழைத்தபோது, 19 வயதுகுட்பட்டோருக்கான அணிக்கு பயிற்சியாளராக சென்றார். டிராவிட் பயிற்சியளித்த இரண்டு வருடங்களில் இந்திய அணி ஒருமுறை உலகக்கோப்பை இறுதிப் போட்டி வரை சென்றது. இன்னொரு முறை உலகக்கோப்பையையே வென்றது. அப்போதும் டிராவிட்டிற்கு வழங்கப்பட்ட சன்மானத்தை வாங்காமல் அனைத்து கோச்சிங் ஊழியர்களுக்கும் வழங்கப்படவேண்டும் என்றார்.

டிராவிட்டிடம் சென்று இந்தப் போட்டியில் உங்களது இன்னிங்ஸ் தான் சிறந்தது எனக் கூறினால், நிச்சயம் அதனை அவர் ஏற்றுக்கொள்ளாமல் வேறு ஒருவரின் செயல் தான் இந்திய அணியின் வெற்றிக்கு காரணம் என விலகுவார். 

ஆஸ்திரேலியா வீரர்கள் மட்டுமே பங்கேற்கும் பிராட் மேன் நினைவு தினத்தில் பேசுவதற்காக அழைக்கப்பட்ட முதல் இந்திய வீரர் டிராவிட் தான். 90களின் இறுதியில் ஆஸ்திரேலியர் அல்லாத ஒருவர் ஆஸ்திரேலிய அணிக்குள் இடம்பிடிக்க முடியும் என்றால் அது டிராவிட் மட்டுமே என மெக்ராத்தால் புகழப்பட்ட ஒரே வீரர்.

தடுப்புச் சுவர் எனும் டிராவிட் இந்திய அணியில் ஆடியதோடு அல்லாமல், எதிர்கால இந்திய அணியை உருவாக்குவதிலும் முக்கிய பங்காற்றினார். இன்று இந்திய அணிக்கு ஆடும் கே.எல்.ராகுல், ரிஷப் பந்த், ப்ரித்வி ஷா, ஹர்திக் பாண்டியா, சஞ்சு சாம்சன், ஸ்ரேயாஸ் ஐயர், மயாங்க் அகர்வால், விஜய் சங்கர், சுப்மன் கில் என அனைவரும் டிராவிட்டால் உருவாக்கப்பட்ட வீரர்கள்.

இவையெல்லாம் கடந்து சுழற்பந்துவீச்சை எதிர்கொள்ள இங்கிலாந்து வீரர் பீட்டர்சன், ஆலோசனைக்காக டிராவிட்டை அணுகியது, ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக்கின் புத்தகத்திற்கு முன்னுரை எழுதியது, இங்கிலாந்து கேப்டன் மைக்கல் வாஹன் இந்திய சுழற்பந்துவீச்சை துவம்சம் செய்தபோது இங்கிலாந்து ட்ரெஸிங் ரூமிற்கே சென்று எப்படி செய்தீர்கள் எனப் பாராட்டியது என டிராவிட்டின் பெருமைகளை சொல்லிக்கொண்டே போகலாம்.

 

''if you ask him to walk on water, he will ask how many kilometers'' இது டிராவிட் பற்றி ஹர்ஷா போக்லே கூறிய வாக்கியம்.

இந்திய அணிக்காக விக்கெட் கீப்பிங் செய்யவேண்டும், நான் இருக்கிறேன்...
இந்திய அணியில் ஓபனிங் பேட்ஸ்மேன் காயம், நான் இருக்கிறேன்...
ஸ்லிப்பில் ஃபீல்டிங் செய்ய ஆளில்லை, நான் இருக்கிறேன்...
இந்திய அணிக்கு கேப்டன் இல்லை, நான் இருக்கிறேன்...
இன்றைய நாள் முழுவதும் பேட்டிங் செய்ய வேண்டும், நான் இருக்கிறேன்....
22 பந்துகளில் அரைசதம் அடிக்கவேண்டும், நான் இருக்கிறேன்...
மூன்றாவது பேட்ஸ்மேன் இல்லை, நான் இருக்கிறேன்...
நீங்கள் ஓய்வுபெறுங்கள், சரி... ஒதுங்கிகொள்கிறேன்...

இப்படி இந்திய அணிக்காக விளையாடி 16 வருடங்களிலும் அக்மார்க் டீம் ப்ளேயராக ஆடிய ஒரே இந்திய வீரர் ராகுல் ஷரத் டிராவிட். 

தற்போது இந்திய அணிக்கு அடுத்த ஒரு உலகக்கோப்பையை வெல்வதற்காக பயிற்சியாளர் பொறுப்பையும் ஏற்று, நியூசிலாந்து தொடரை வென்று வெற்றியுடன் தனது பயிற்சியாளர் பொறுப்பை தொடங்கியுள்ளார். 

இவையனைத்தையும் கடந்து மார்புக்கு போடப்பட்ட பந்தை பேக்ஃபூட்டால் கால்களுக்கு அடியிலேயே சுற்றவைக்கும் அந்த ஒரு ஸ்ட்ரோக் போதும், டிராவிட்டின் பெயர் நூற்றாண்டுகளைக் கடந்து நிற்க. பிறந்தநாள் வாழ்த்துகள் ராகுல் டிராவிட்...!


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement
Advertisement