ஃபிஃபா உலகக்கோப்பை: வாழ்வா சாவா ஆட்டத்தில் போலாந்தை வீழ்த்தி அர்ஜெண்டினா அபார வெற்றி!
போலாந்து அணிக்கு எதிரான உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணி வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
கத்தாரில் ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் முக்கிய ஆட்டத்தில் அர்ஜென்டினா - போலாந்து அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் வெற்றிபெற்றால் மட்டுமே அர்ஜென்டினா அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற இக்கட்டான சூழ்நிலையில் களமிறங்கியது. ஆனால் போலாந்து அணி டிரா செய்தாலே அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும். இதனால் ரசிகர்களிடையே இந்த ஆட்டத்திற்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
அந்த எதிர்பார்ப்புக்கு ஏற்ப ஆட்டம் தொடங்கியது முதலே அர்ஜென்டினா அட்டாக் மேல் அட்டாக் செய்தது. இதனைத் தடுக்க போலாந்து அணிகளின் 10 வீரர்களும் தடுப்பாட்டத்தில் மட்டுமே ஈடுபட்டனர். அந்த அளவிற்கு அர்ஜென்டினா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்தது. இதன் பலனாக ஆட்டத்தின் 37ஆவது நிமிடத்தில் அர்ஜென்டினா அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது.
அந்த பெனால்டியை நட்சத்திர வீரர் மெஸ்ஸி அடிக்க, அதனை போலாந்து அணியின் கோல் கீப்பர் செஷ்னி சிறப்பாக தடுத்து நிறுத்தினார். இதனைத் தொடர்ந்தும் அர்ஜென்டினா கோல் அடிக்க எடுத்த முயற்சிகள், போலாந்து கோல் கீப்பரால் தடுக்கப்பட்டது. இதனால் முதல் பாதி ஆட்ட நேரம் கோல் அடிக்கப்படாமலேயே முடிவுக்கு வந்தது.
இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கிய இரண்டாவது நிமிடத்திலேயே அர்ஜென்டினா அணி முதல் கோல் அடித்து அசத்தியது. அர்ஜென்டினா அணியின் ஆலிஸ்டர் முதல் கோலை அடித்து முன்னிலைப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து போலாந்து அணி கோல் அடிக்க வேண்டிய நிலை வந்தது. அதற்கேற்ப போலாந்து அணியும் அட்டாக்கை தொடங்கியது. ஆனால் அதனை அர்ஜென்டினா தடுப்பாட்ட வீரர்கள் தடுத்து நிறுத்தினர்.
தொடர்ந்து சில நிமிடங்களில் அர்ஜென்டினா அணி அமைதியாக பந்தை தங்களுக்குள் பாஸ் செய்து ஆதிக்கம் செலுத்த, 67வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணியின் ஆல்வரஸ் இரண்டாவது கோலை அடித்தார். இதனால் அர்ஜென்டினா அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. இதன் பின்னர் அர்ஜென்டினா அணியின் ஆதிக்கம் அதிகரித்தது.
இதனிடையே போலாந்து அணி மேலும் ஒரு கோல் வாங்கினால், அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாத நிலை ஏற்பட்டது.இதனிடையே எளிதாக கோல் அடிக்கும் வாய்ப்பை அர்ஜென்டினா அணியின் மார்டினெஸ் தவறவிட்டார். தொடர்ந்து இரண்டாம் பாதி ஆட்டத்தில் 6 நிமிடங்களில் கூடுதலாக வழங்கப்பட்டது. அதில் அர்ஜென்டினா அணி கோல் அடிக்க எடுத்த முயற்சியை, கோல் லைனில் இருந்து போலாந்து வீரர்கள் தடுத்தனர். இறுதியாக அர்ஜென்டினா அணி 2-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றியை பதிவு செய்தது.
Win Big, Make Your Cricket Tales Now