
கபடி வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் கடந்த 2014ஆம் ஆண்டு இந்தியாவில் ப்ரோ கபடி லீக் போட்டி தொடங்கியது. இதுவரை 9 சீசன்கள் முடிந்துள்ள நிலையில்,இத்தொடரின் 10ஆவது சீசன் நேற்று தொடங்கியது. இதில் முதல் போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 38-32 என்ற கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸையும், இரண்டாவது போட்டியில் யு மும்பா அணி 34-31 என்ற கணக்கில் யுபி யோத்தாஸ் அணியையும் வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளன.
இந்நிலையில் இன்று நடைபெற்ற மூன்றாவது ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி – தபாங் டெல்லி அணியுடன் மோதியது. இப்போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய தமிழ் தலைவாஸ் அணி அடுத்தடுத்து புள்ளிகளைப் பெற்று முதல் பாதி ஆட்டத்திலேயே முன்னிலைப் பெற்றது. இதன்மூலம் முதல் பாதி ஆட்டநேர முடிவில் தமிழ் தலைவாஸ் அணி 18 -14 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலைப் பெற்றது.
இதையடுத்து தொடங்கிய இரண்டாம் பாதி ஆட்டத்திலும் அபாரமாக செயல்பட்ட தமிழ் தலைவாஸ் அணி டெல்லி வீரர்களுக்கு தண்ணிக்காட்டினர். அதிலும் குறிப்பாக நட்சத்திர வீரர் அஜிங்கியா பவார் தனது அபாரமான ஆட்டத்தின் மூலம் அடுத்தடுத்து புள்ளிகளைப் பெற்று அணியை தொடர்ந்து முன்னிலையில் இருக்க உதவினார். அவருடன் நரேந்திர் ஹாஷியரும் சிறப்பாக செயல்பட அணியின் வெற்றியும் உறுதியானது.